பிரியாணி பிரியர்களுக்கு பேட் நியூஸ்- தங்கம் போல மாறும் ‘சீரக சம்பா அரிசி’ – கிடுகிடு விலை உயர்வால் அதிர்ச்சி!

Published On:

| By Mathi

Briyani Price Hike

சீரக சம்பா அரிசியின் விலை நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பிரியாணி கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை உள்ளிட்ட நகரங்களில் சீரக சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் பிரியாணி விலையை சில கடை உரிமையாளர்கள் உயர்த்தி இருப்பது பிரியாணி பிரியர்களை கவலை அடைய செய்திருக்கிறது.

இன்றைய வாழ்வில் ‘பிரியாணி’ பிரிக்க முடியாத ஒரு உணவு வகையாக இடம் பிடித்துள்ளது. திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என ‘வெரைட்டி’ பிரியாணிகள் இருந்தாலும் திண்டுக்கல் பிரியாணிக்கு எப்பவுமே மவுசு அதிகம்தான்.

ADVERTISEMENT

திண்டுக்கல் பிரியாணியின் சுவைக்கு காரணம் மசாலா வகைகள் மட்டுமல்ல.. இதில் பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசி மிக முக்கியமான காரணம். ஆம்பூர் பிரியாணி, சென்னை பிரியாணியில் பாசுமதி அரிசி பயன்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல், மதுரை சுற்று வட்டாரங்களில் சீரக சம்பா அரிசிதான் பிரியாணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் தற்போது சீரக சம்பா விலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் 100%-க்கும் அதிகமாக சீரக சம்பா அரிசியின் விலை உயர்ந்திருப்பதால் பிரியாணி கடை உரிமையாளர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

ADVERTISEMENT

இது பற்றி திண்டுக்கல் ‘ஹோட்டல் முஜிப் பிரியாணி’ உரிமையாளர் முஜிபுர் ரஹ்மானிடம் நாம் பேசிய போது, நாங்கள் சந்தித்து கொண்டிருக்கும் மிக முக்கியமான நெருக்கடி சீரக சம்பா அரிசி விலை உயர்வுதான்.. தங்கம் விலையைப் போல தினம் தினம் உயருகிறது.. 3 மாதங்களுக்கு முன்னர் 1 கிலோ சீரக சம்பா அரிசி விலை ரூ80. இன்றைக்கு 1 கிலோ விலை ரூ200. இந்த விலை இத்துடன் நிற்காதாம்.. இன்னும் அதிகமாக உயரவும் செய்யுமாம்.. ரூ80-க்கு அரிசி வாங்கி பிரியாணி தயார் செய்து மக்களுக்கு கொடுத்தோம்.. இப்போது ரு200-க்கு அரிசி வாங்கி அதே விலையில் பிரியாணியை மக்களுக்கு கொடுக்க முடியுமா? என்கிறார்.

மேலும், சீரக சம்பா அரிசி ரகத்தின் பூர்வீகமே தமிழ்நாடுதான். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தின் சித்தையங்கோட்டை காலாபாத் அரிசி ரகமும், தொப்பம்பட்டி சீரக சம்பாவும்தான் இன்றைக்கு சர்வதேச அளவில் திண்டுக்கல் பிரியாணிக்கு மார்க்கெட்டை ஏற்படுத்தி தர காரணம். அன்றைய காலத்தில் இருந்த நிலைமை இப்போது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளமான சீரக சம்பா அரிசியை நாங்கள் மேற்கு வங்கத்தில் இருந்துதான் வாங்குகிறோம்.

ADVERTISEMENT

பொதுவாக வெள்ளம்- வறட்சி ஆகியவைதான் தானியங்கள் விலை ஏற்றத்துக்கு காரணமாக சொல்வார்கள்.. ஆனால் சீரக சம்பா விலை ஏற்றத்துக்கு என்னதான் காரணம் என யாரும் சொல்லவும் இல்லை..

இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசுதான் தலையிட வேண்டும்.. இது ஒரு நீண்டகால பிரச்சனை. தொலை நோக்கு அடிப்படையில் தமிழ்நாட்டின் பூர்வீக நெல்லான சீரக சம்பா அரிசி ரகத்தை பயிரிட நமது தமிழ்நாட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதான் நல்ல தீர்வாக இருக்கும்.. பிரியாணி விலை உயர்வை இன்னமும் நாங்கள் அறிவிக்கவில்லை.. பிரியாணி விலையை 20% அளவுக்காவது உயர்த்தினால்தான் கட்டுபடியாகும். சங்கங்களுடன் உரிய ஆலோசனைகள் நடத்திதான் முடிவெடுப்போம் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்.

கோவையிலும் சீரக சம்பா அரிசி பிரியாணி பயன்பாடு அதிகம். கோவையில் பெரிய ஹோட்டல்களில் சட்டென பிரியாணி விலை உயரவில்லை என்ற போதும் பொதுவாக கடைகளில் ரூ10 வரை பிரியாணி விலையை உயர்த்தி இருக்கின்றனர். சீரக சம்பா அரிசி விலை உயர்வைப் பார்த்தால் பிரியமான பிரியாணி உணவு பிரியா விடை பெற்றுவிடும் போல!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share