தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில்சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் வெற்றி, முப்பெரும் விழா, அமெரிக்கா பயணம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பேசியிருந்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கட்சிக்குள் நிலவி வரும் முக்கியமான பிரச்சனை குறித்தும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அவர், ”சமீபகாலமாக ஆட்சி நிர்வாகத்தை விட உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், நகராட்சி, கவுன்சிலர்கள் ஆகியோரால் தான் கட்சிக்கு கெட்ட பெயர் உருவாகி வருகிறது.
ஆங்காங்கே உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் நம் கட்சியினருக்குள்ளேயே பதவி சண்டை ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் நமக்கு அதிருப்தியை உண்டாக்கும்.
எனவே உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவினரிடையே நிலவும் உட்கட்சி பிரச்சனையை உடனடியாக கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நெல்லை மேயர் தேர்தலில் திமுக தலைமை நிறுத்திய வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எனினும் அவருக்கு எதிராக அதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியதும், அவர் 23 வாக்குகளை பெற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பல நகராட்சிகளிலும் திமுகவினருக்கு இடையிலேயே பதவி சண்டை நடைபெற்று வருகிறது. இதை மனதில் வைத்து தான் உள்ளாட்சி பிரதிநிதிகளை கடுமையாக எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
Share Market : வாரத்தின் கடைசி நாள்… ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!
