புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On:

| By Balaji

ஜனாதிபதி பதவி தேர்தலில், பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்று நாட்டின் 14-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25ஆம் தேதி முடிவடைவதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 17ஆம் தேதி திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி பதவிக்கு பாஜக சார்பில் [பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும்](https://minnambalam.com/k/2017/06/19/1497877902), காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிட்டனர். அதையடுத்து, இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து [ஆதரவு திரட்டினர்](https://minnambalam.com/k/2017/06/24/1498310081).

கடந்த 17ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது, நாடாளுமன்ற வளாகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற அலுவலகங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டார்கள். அதில், 99 சதவீதம் வாக்குகள் பதிவானது.மொத்தம் 4,895 வாக்குகள் பதிவானது. இதில் 776 பேர் எம்.பி.க்கள், 4,119 பேர் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஊழல் வழக்கு தொடர்பாக, தகுதி இழப்பு செய்யப்பட்டதால் அவரால் ஓட்டுப்போட முடியவில்லை. அதையடுத்து, வாக்குப்பதிவு முடிந்ததும் நாடு முழுவதிலிருந்தும், அந்தந்த மாநிலங்களில் வாக்களித்த வாக்குப்பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. நாடாளுமன்ற செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான அனுப்மிஸ்ரா மேற்பார்வையில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது. மொத்தம் 4 மேஜைகளில், 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில், நாடாளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. மாநிலங்களின் ஆங்கில அகர வரிசைப்படி முதலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், ஜார்க்கண்ட், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், கேரளா என்று வரிசையாக எண்ணப்பட்டன. அந்த வரிசைப்படி 24-வதாக தமிழக வாக்குகளும், இறுதியாகப் புதுச்சேரி வாக்குகளும் எண்ணப்படுகின்றன. மாலை 5 மணிவரை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

ஓட்டு எண்ணிக்கையில் பகல் 1 மணி நிலவரப்படி ஆளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் 22,941 வாக்குகள் பெற்று பின்தங்கிய நிலையில் இருந்தார். இந்நிலையில், பாஜக-வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதோடு, பா.ஜனதா கூட்டணி கட்சிகள் தவிர அதிமுக அணிகள், [ஐக்கிய ஜனதா தளம்](https://minnambalam.com/k/2017/06/19/1497878456), தெலுங்கானா, மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பிராந்திய கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததையடுத்து வாக்கு எண்ணிக்கையில் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து முன்னிலையே வகித்து வந்தார்.

இறுதியாக, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மாலை 5 மணிக்கு பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக நாடாளுமன்ற செயலாளர் அனூப் மிஸ்ரா, அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மொத்தம் பதிவான 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 66 சதவீத வாக்குகளாக 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 34 சதவீத வாக்குகளாக 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதையடுத்து, வருகின்ற 25-ந் தேதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று அவரது சொந்த ஊரான, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேராபூர் கிராம மக்கள் யாகம் நடத்தி கடவுளிடம் வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தேராப்பூரில், கடந்த 1945ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளிக்கல்விக்கு பின்னர், கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, லக்னோ பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக குழு உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராகவும், உச்சநீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாகவும் இவர் செயல்புரிந்துள்ளார்.

1994ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற குழு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற குழு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற குழு ஆகியவற்றில் ராம்நாத் கோவிந்த் உறுப்பினராக இருந்துள்ளார்.

1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை பாஜக தலித் மோர்ச்சா தலைவராக இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி, பீகார் மாநில ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணி அரசால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் தேர்தலில் போட்டியிட்டு தற்போது, நாட்டின் 14வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share