மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து!

Published On:

| By Balaji

கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரத்து 548 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில அரசின் சட்டப்படி மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் பதிவுசெய்ய வேண்டும். பின்னர், அரசு நடைமுறைப்படி ஒரு வருடத்துக்குக் கிராமப்புறங்களுக்குச் சென்று கட்டாய மருத்துவப் பணி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டும். இதுதான் மகாராஷ்டிர மாநிலத்தின் வழக்கமான நடைமுறை.

இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை மருத்துவப் படிப்பு முடித்துப் பட்டம் பெற்று கிராமப்புறங்களில் பணியாற்றாத மருத்துவர்கள் குறித்து மகாராஷ்டிரா அரசு தீவிர ஆய்வு மேற்கொண்டது. இதில் விதிமுறைகளை மீறி 4 ஆயிரத்து 548 மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

“மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை மருத்துவ பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் தங்களது அங்கீகாரத்தைக் குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்க வேண்டும். ஓராண்டு கிராமப்புறத்தில் கட்டாயம் பணியாற்றியிருக்க வேண்டும். அதை மீறுபவர்களுக்கு இளங்கலைப் பட்டதாரி என்றால் ரூ. 10 லட்சமும், முதுகலைப் பட்ட மருத்துவர் என்றால் ரூ. 50 லட்சமும், நிபுணர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 2 கோடியும் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதைத்தான் செய்துள்ளது மாநில அரசு” என்று மாநில மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகள் இன்று (அக்.14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share