மதுரை செல்லும் முதல்வர்!

Published On:

| By Balaji

குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற இன்று மாலை மதுரை செல்லவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றிருந்த 36 பேர் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 9பேர் உயிரிழந்தனர். 27பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று (மார்ச் 12) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விபத்து குறித்து அறிந்து மன வேதனை அடைந்தேன். சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 39பேர் மலையேற்றப் பயிற்சிக்காக குரங்கணி சென்றுள்ளனர். அதில் 3பேர் மட்டும் மலையேறாமல் திரும்பி விட்டனர். மீதமுள்ள 36பேரும் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். தற்போது 10பேர் சிறு காயங்களுடன் தப்பி வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். 17பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும்,”காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரிக்க இன்று மாலையில் மதுரை செல்ல இருக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், “தீ எதனால் பரவியது என்பதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்தவித அனுமதியுமின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோடைக்காலத்தில் மலைகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இனி இதுபோன்ற பயிற்சிகளுக்கு அரசிடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். வருங்காலத்தில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.,”

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share