மதுரையைக் குறிவைக்கும் சிவகார்த்தி

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.

சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் இணைந்து பணியாற்றிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரு படங்களும் மதுரை வட்டாரத்தை மையமாகக் கொண்டு உருவாகி வெற்றிபெற்றன. சிவகார்த்திகேயன் – சூரி கூட்டணியின் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மூன்றாம் முறையாக இந்த கூட்டணி சீமராஜாவில் இணைந்துள்ளது.

ADVERTISEMENT

சின்னத்திரையில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே குழந்தைகள், பெண்கள் ஆகியோரை தனது ரசிகர்களாக மாற்றிய சிவகார்த்திகேயன் திரைப்படத்துறைக்கு வந்த பின்னரும் அதை தக்கவைத்துள்ளார். தொடர்ந்து காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்துப் பாணியிலும் நடித்துக் குறுகிய காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக உருவாகி வருகிறார். சீமராஜா படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிகொடுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ள படக்குழு மதுரை ரசிகர்களை கவரும் விதமாகப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்த உள்ளது. 24 ஏஎம் நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாரேன் வாரேன் சீமராஜா’ பாடலின் சிங்கிள் டிராக் ஜூலை 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் சமந்தா முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share