bபோராட்டம்: வட்டமிட்டு வளைத்த போலீஸ்!

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை – கொல்கத்தா இடையேயான ஐபிஎல் போட்டியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களைக் காவல் துறையினர் வாலாஜா சாலையிலேயே தடுத்து நிறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரித் தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ் அமைப்புகள் அறிவித்தன.

இதனையடுத்துப் போராட்டக்காரர்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக முற்றுகையிட வருவார்கள் என்று காவல் துறையினர் முன்னரே கணித்து வைத்திருந்தனர். அதே சமயத்தில் மெரீனா அருகே காமராஜர் சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னை பல்கலைக்கழகம் அருகே ரஜினி மக்கள் மன்றத்தினர் திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் சரியாக 5.15 மணியளவில் கிரவுன் பிளாசா, ரேடிசன் ப்ளு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மைதானத்தை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த திருவல்லிக்கேணி மற்றும் ஜாம் பஜார் பகுதியில் சாலைகள் தொடங்கும் இடங்களிலும், முடியும் இடங்களுக்கும் காவல் துறையினர் சீல் வைத்தனர். இப்பகுதிகளில் சுமார் 4000 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சேப்பாக்கம் மைதானம் அருகே ரயில் நிலையம் உள்ளது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்துக்குள் சென்று தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், அப்பகுதியையும் நாங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தோம் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறினார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், நாங்கள் போராட்டத்தைத் தடுக்கச் சரியான திட்டமிடலைக் கையாண்டோம். போராட்டத்தால் எவ்வித வன்முறையோ, காயமோ ஏற்படவில்லை. நேற்றைய போராட்டம் அமைதியான முறையில் முடிவடைந்தது. இளம் அதிகாரிகள் நிலைமையை சிறப்பாக கையாண்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

**பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்**

பாதுகாப்புப் பணியில் 5 இணை கமிஷனர்கள், 13 துணை கமிஷனர்கள், 9 கூடுதல் சூப்பிரண்டெண்டெண்டுகள், 100 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களோடு 100 கமாண்டோ படை வீரர்களும், 100 அதிரடிப் படை வீரர்களும், 500 ஆயுதம் தாங்கிய வீரர்களும், 100 விரைவு அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதை சமாளிக்க 4 தீயணைப்பு வாகனங்களுடன் 50 தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்தனர். போராட்டக்காரர்களைத் தடுக்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் 3 கண்ணீர் புகை குண்டு வாகனமும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்களைத் தடுக்க 450 தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

**இதுதான் நடந்தது**

3 மணி: போராட்டக்காரர்கள் அண்ணா சாலையிலுள்ள தாராப்பூர் டவர் அருகே ஒன்றுகூடினர். இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர்.

4 மணி: போராட்டக்காரர்கள் 750 பேர் வாலாஜா சாலை வழியாக மைதானத்தை முற்றுகையிட வந்தனர்.

4.30 மணி: போராட்டத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து முடங்கியது.

5 மணி: இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன், கவிஞர் வைரமுத்து, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மைதானத்தை முற்றுகையிட வந்தனர்.

5.15: ஐபிஎல் வீரர்கள் காமராஜர் சாலை வழியாக மைதானத்தை சென்றடைந்தனர்.

5.30 மணி: போராட்டக்காரர்கள் அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6.15: மணி: போராட்டக்காரர்கள் தடுப்பு அரண்களைத் தாண்டி வருவதற்கு முயற்சி செய்தனர். காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

6.45 மணி: மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share