தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் பூமிக்கு வரும் நியூட்ரினோ அணுத் துகள்களை ஆய்வு செய்ய தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமம் அருகே இருக்கும் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த மையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து டாடா நிறுவனம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இம்மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மனுவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பிறகு, வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நேற்று (டிசம்பர் 21) உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரிய தாவரங்கள், உயிரினங்கள், பாலூட்டிகள், மீன் வகைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ போன்ற சோதனைத் திட்டங்களை அனுமதிப்பது இயற்கைக்கு எதிரானது எனவும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
