இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமரப்பள்ளி கட்டுமான நிறுவனத்தின்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வந்த கட்டுமான நிறுவனம் அமரப்பள்ளி. இந்நிறுவனத்திடம் பெந்த்ஹவுஸ் ரக (கண்ணாடி மாளிகை) பங்களா ஒன்று 5,500 சதுர அடியில் வாங்க 10 ஆண்டுகளுக்கு முன்பு தோனி முன்பதிவு செய்துள்ளார். மேலும் 2009 முதல் 2016 வரை அமரப்பள்ளி நிறுவனத்தின் பல்வேறு விளம்பரங்களிலும் தோனி நடித்துள்ளார். ஆனால் இந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வீடு கட்டித் தர இயலாமல் ஆனது. வீடு கட்டுமானம் தொடர்பாக இதுவரையில் 46,000 பேர் வரை இந்நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அமரப்பள்ளி நிறுவனத்திடம் வீடு வாங்க 2009ஆம் ஆண்டே பணம் கொடுத்தும் இன்னமும் வீடு கட்டித் தரவில்லை என்று தோனி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ”இதுவரையில் 20 லட்சம் ரூபாய் அந்த வீட்டுக்கு செலுத்தியுள்ளேன். வீட்டின் மொத்த மதிப்பு அப்போது சரியாகக் கணக்கிடப்படவில்லை, சுமார் ரூ.1 கோடி மதிப்பில் வீட்டை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுவரையில் வீடு கட்டி முடிப்பதற்கான பணிகள் முடியவில்லை. அந்த நிறுவனம் எனக்குத் தர வேண்டிய உரிய பணத்தையும் தரவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதே நிறுவனத்தின் மீது தனது விளம்பரப் படங்களுக்கான பணம் ரூ.40 கோடியை இன்னும் தராமல் இருப்பதாகக் கூறி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தோனி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் , தற்போது வீடு கட்டித்தரவில்லை எனவும் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏப்ரல் 30ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
