நடிகர் விஜய்யின் 63ஆவது திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய் இணைகிறார். விஜய்யின் 64ஆவது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்தை 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதை விஜய்யின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இவரது மகள் சினேகா பிரிட்டோ 2012ஆம் ஆண்டில் சட்டம் ஒரு இருட்டறை இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே இயக்கிய மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 பொறுப்புகளை விஜய் முடித்துக்கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் கையாளுகின்றனர். படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தளபதி 63 படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை ஜூலை 19ஆம் தேதியன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**





