நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இயந்திரங்கள் மூலம் பணி செய்வதை தடை விதிக்க கோரிய வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பணிகள் இயந்திரங்கள் மூலமாகவும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் பஞ்சாயத்து மூலமாக தான் நடைபெற வேண்டும் என்ற விதிகள் உள்ளது. இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் இருந்த போதும் தொடர்ச்சியாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று(ஜூன் 18) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இந்த மனு தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை 2 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
