ஆவின் ஊழலில் அமைச்சரின் அண்ணன் மகள்?

Published On:

| By Balaji

ஆவின் பால் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்குப் பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரியில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பொதுமேலாளராக பசவராஜ், 54, பணியாற்றி வந்தார். இவர், ஈரோட்டிலுள்ள, ஆருத்ரா பால் நிறுவனத்துக்கு எந்தவித அரசாணையுமின்றி, பால் விநியோகம் செய்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆவின் நிறுவனத்துக்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அரசு உத்தரவின்றி தனியார் நிறுவனத்துக்குப் பால் வழங்கியதோடு மட்டுமின்றி, 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, சென்னை, ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், கிருஷ்ணகிரி ஆவின் பொதுமேலாளர், பசவராஜை, பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்துக்குத் தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து தனியார் பால் நிறுவனங்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படுகிறதா?அப்படி வழங்கப்பட்டால் எந்தெந்த பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது? என்ன விலைக்கு வழங்கப்படுகிறது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT

”ஆர்டிஐ தகவலின் படி, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதியிட்ட கடிதத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையிலிருந்து கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு மருந்து தயாரிப்பதற்காகப் பால், வெண்ணெய், நெய் அனுப்பப்படுவதாக நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல்அலுவலர் பதிலளித்துள்ளார்.

அதேபோல, “2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியிட்ட கடிதத்தில், கிருஷ்ணகிரியில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையிலிருந்து கேரள அரசின் மில்மா பால் நிறுவனத்திற்கு மட்டும் நாளொன்றுக்கு 4,73,058.930 கிலோ பால் பொருட்கள் வழங்குவதாகவும், வேறு “எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் பண்ணையிலிருந்து பால் வழங்கப்படவில்லை” என தர்மபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலர் பதில் அளித்துள்ளார். ”12.02.2019ம் தேதியிட்ட கடிதத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையிலிருந்து கேரள அரசின் மில்மா பால் நிறுவனத்திற்குப் பால், வெண்ணெய், நெய் அனுப்பப்படுகிறது” என கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலரும் பதில் அளித்துள்ளார்..

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையிலிருந்து எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து விட்டு, எந்த ஒரு அரசாணையும் இன்றி “ஆருத்ரா” எனும் தனியார் பால் நிறுவனத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் பால் வழங்கி ஆவின் பொது மேலாளரே மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணை ஏதும் இல்லாமலும், ஆவின் ஒன்றியத்தின் கணக்கிலும் காட்டாமலும் தினசரி பல ஆயிரம் லிட்டர் பாலினை தனியார் பால் நிறுவனத்திற்கு வழங்குவது தனியொரு நபரால் சாத்தியமில்லை என்று அறிவிப்பில் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர், ” கீழ்மட்ட அதிகாரிகள் தொடங்கி மேல்மட்ட அதிகாரிகள், அரசியல் வாதிகள் எனப் பலருக்கும், தொடர்பில்லாமல் அவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்திருக்கவும் வாய்ப்பில்லை. கிருஷ்ணகிரி பால் பண்ணையில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று தமிழகத்தில் உள்ள இதர ஆவின் பால் பண்ணைகளிலும் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

”அரசு துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகளுக்கு பின்னால் ஆவின் நிறுவனத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கும் மிகப்பெரிய சதிகார கும்பல் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுவதால் தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்து, அவர்கள் முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய ஆணையிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மேலும் விவரம் அறிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர், பொன்னுசாமியிடம் பேசினோம். ”ஆருத்ரா நிறுவனம் என்பது தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரின் அண்ணனின் மகளுடையது என்று சொல்லப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாகச் சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களைப் பணி நீக்கம் செய்து, இழப்பீடு ஏற்படுத்திய தொகையையும், முறைகேடு மூலம் சம்பாதித்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார் பொன்னுசாமி.

இதுகுறித்து பால் வளத் துறை செயலாளரிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share