நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது இரண்டாவது படம் ஆகும்.
நீண்ட கால தயாரிப்பில் இருந்த அயலான் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருந்தபோதிலும் படம் வராது என தமிழ் சினிமா வியாபார வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது.
அதே போன்று இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் கூறிய குற்றசாட்டுகள் அவரது சினிமா வாழ்க்கையை சீர்க்குலைக்கும் வகையில் ஊடகங்களில், சினிமா வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
அதனால் சிவகார்த்திகேயன் மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டதாகவும் செய்திகள் கசிந்துவந்த போதும் எதற்கும் பதில் கூறாமல் மெளனம் காத்துவந்த சிவகார்த்திகேயன் நேற்று மாலை சென்னை தாஜ் கோரமண்டல் ஹேட்டலில் நடைபெற்ற அயலான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜே.ராஜேஷ், “தெலுங்குக்கு எப்படி பாகுபலி ஒரு அடையாளமாக இருக்கிறதோ, அப்படி தமிழுக்கு அயலான் படம் இருக்கும். ஜனவரி 5ஆம் தேதி டிரைலர் வெளியாகும்.
அயலான் படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது, சிஜி விசயங்களில் தமிழில் ஒரு முன்மாதிரியான படமாக அயலான்இருக்கும்” என கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமான அரங்கங்களில் நடைபெற்று வரும் சூழலில் சில நூறு பேர்களே அமரக்கூடிய ஹாலில் அயலான் இசை வெளியீடு விழா நடைபெறுவதை பற்றி குறிப்பிட்டார்.
இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் எப்பவும் பெருசா இருக்கும் என்றவர், தயாரிப்பாளர் பாகுபலி ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறி அதிர்வலையை ஏற்படுத்தினார்.
“பல தடைகளை கடந்து வரும் பொங்கலுக்கு எந்த படம் வந்தாலும் அயலான் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்.
படத்தின் கதை மீதும் இயக்குநர் ரவிகுமார் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை எனக்குஉள்ளது, அயலான் படத்தில் பவுடர் ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி எடுத்திருக்கிறோம். நிச்சயமாக தமிழில் வெளியாக உள்ள ஒரு நல்ல படமாகவே அயலான் இருக்கும்.
அவரை முந்தணும், இவரை முந்தணும் என்கிற எந்தவொரு போட்டியும் எனக்கு இல்லை. தமிழ் சினிமாவுக்கு என்னால முடிந்த நல்ல படங்களை கொடுக்கணும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யணும், அதுதான் வேண்டும். பொங்கலுக்கு வருகின்ற அயலான் மட்டுமல்ல மற்ற படங்களும் வெற்றி பெற வேண்டும்” என கூறினார் சிவகார்த்திகேயன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை: ஜனவரி 14-ல் மணிப்பூரில் துவக்கம்!
