அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 2-வது பாகத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அயலான். இதில் அவருடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகிபாபு என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருந்தார்.
இப்படம் குழந்தைகள், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அயலான் படத்தின் 2-வது பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக, உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கான ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டதாகவும், பிரீ புரொடக்ஷன் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாகவும் தெரிகிறது.
குறிப்பாக படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்கு மட்டுமே படத்தின் பட்ஜெட்டில், சுமார் 5௦ கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்களாம். இதன் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக பார்ட் 2 படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் SK 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுக்கும் நடுவே அயலான் படத்திற்கும் அவர் தேதிகள் ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Comments are closed.