உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) துணை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் சுகாதார வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநர் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தன. இந்தியாவின் சவுமியா சாமிநாதனை அப்பதவியில் நியமிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அடானாம் அறிவித்துள்ளார்.
அந்த அமைப்பின் இரண்டாவது மிக உயரிய பதவி இதுவாகும். மற்றொரு துணை இயக்குநராக பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் எலிசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவராக சவுமியா உள்ளார். இதற்கு முன்னர், சென்னையில் உள்ள காச நோய் தொடர்பான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் இவரது தந்தை. கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிவரும் சவுமியா, காச நோய், எச்.ஐ.வி. போன்றவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.