நீரோட்டத்துக்குத் தடையான கட்டடங்களை இடிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

தமிழகத்திலுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்து நீர்நிலைகளின் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் ரூ.112 கோடி செலவில் சுவர் எழுப்ப தடை விதிக்கக் கோரி இயற்கைவளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுவர் கட்டுவதால், ஓடையின் அகலம் குறைந்து, ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால், சுவர் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு வந்தது. அப்போது, “நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17ஆம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர். மேலும், அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலாளருக்கும், உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீர்வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. நீரோட்டத்துக்குத் தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய, நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT

**வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share