சுயாட்சி: இரு நூற்றாண்டுகளின் சந்தியில் ஒரு விவாதம்!

Published On:

| By Selvam

விவேக் கணநாதன்

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுநிலைகள் குறித்து ஆராய்வதற்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. autonomy debate at the crossroads

ADVERTISEMENT

கூட்டாட்சி விவாத வரலாறு!

தனிப்பட்ட வகையில் இக்குழு மு.க.ஸ்டாலினின் அரசியலில் ஒரு முக்கியக்கட்டம். கலைஞர் கருணாநிதியின் அரசியல் மரபின் தொடர்ச்சியை தன் வாழ்விலும் பிரதியெடுப்பதற்கான மற்றுமொரு வாய்ப்பு இது. அதேநேரம், ஆட்சி முடிவதற்கு 10 மாத காலம் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இக்குழு, திமுகவின் தனிப்பட்ட தேர்தல் உத்திகளில் ஒன்று என்ற விமர்சனத்தையும் கடந்துபோக முடியவில்லை. 

ஆனால், மாநில சுயாட்சி – கூட்டாட்சி விவாத வரலாற்றில், சுயாட்சி அதிகாரங்கள் அல்லது கூட்டாட்சி உறவுநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள், அரசியல் முன்னெடுப்புகளில் தமிழ்நாடு அரசின் இன்றைய முடிவு கூடுதலான சில முக்கியத்துவங்களை பெறுகிறது. கடந்தகாலத்தில் அமைக்கப்பட்ட குழுக்கள், அவற்றின் பின்புலம் போன்றவற்றை ஒப்பிட்டு புரிந்துகொள்ளும்போது இன்றைய குழுவின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை திமுகவின் அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விவாதத்திற்குள் நம்மால் கொண்டு வரமுடியும்.

ADVERTISEMENT

அதன் பொருட்டு முதலில் கூட்டாட்சி விவாத வரலாற்றை நாம் மீள்நினைவுக்கு கொண்டுவர வேண்டியிருக்கிறது.

மாநில அதிகாரங்கள்!

கூட்டாட்சி விவாதத்தின் முதல்கட்டம் என்பது ஏகாதிபத்திய அரசுக்கும், சுயராஜ்ய தேசியவாதிகளுக்கும் இடையே நடந்த விவாதம். இரண்டாவது கட்டம் என்பது உறுப்பு அரசின் தன்மைகளோடு அமைக்கப்பட்ட, கிட்டத்தட்ட தனிக்கட்சி ஆட்சிக்குள் இந்தியாவை வைத்திருந்த காங்கிரஸுக்கு எதிராக மாநில அதிகாரங்களை நோக்கி முன்னேறிய மாநிலக்கட்சிகள், பிராந்திய சக்திகளால் நடத்தப்பட்ட விவாதம்.

ADVERTISEMENT

மூன்றாவது, இனதேசிய – சமூக நீதி அரசியல் கண்ணோட்டத்தை உள்வாங்கி அதற்கான அதிகாரத்தீர்வு குரலாக கூட்டாட்சி விவாதத்தை நடத்திய சக்திகளுக்குச் சொந்தமானது. இந்திய கூட்டாட்சி விவாத வரலாற்றில் இதுவே மிக முக்கிய கட்டமாகும்.

ஆனால், இக்குரல்களுக்குச் சொந்தமான சக்திகளே பின்னர் கூட்டணி ஆட்சி வடிவத்தில் உறுப்புத்தன்மைமிக்க இந்திய ஒன்றிய அதிகாரத்தின் பங்காளிகளாக மாறினர். இப்படி பங்காளிகள் ஆனவர்களும், அவர்களின் பழைய பகையாளிகளாக இருந்த காங்கிரஸுக்கும் இடையே நடந்த விவாதம் என்பது நான்காம் கட்டம், இதுவரையிலான விவாதத்தின் இறுதிக்கட்டமும் ஆகும்.

இந்த நான்கு கட்டத்திலும் முதன்மை சக்தியாகவோ, இரண்டாம் நிலை சக்தியாகவோ, உரிமை கோரும் தரப்பாகவோ அல்லது அதிகார முகமாகவோ பாஜக எப்போதும் இருந்ததில்லை. இப்போதுதான் முதல்முறையாக பாஜக விவாதத்தின் மையமாகவும், அதிகார முகமாகவும் இருக்கிறது.

அரசியலமைப்பு அவையில் மாநில அதிகாரங்கள் குறித்த விவாதத்தின் போது அன்றைய ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினரான ஹெச்.வி.காமத், “காங்கிரஸ் மட்டுமே இந்த நாட்டை எப்போதும் ஆட்சி செய்யப்போகிறது என்கிற எண்ணத்தில் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்” என்று பேசியிருப்பார்.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்புலம், அன்றைய இந்தியச் சூழல் இவற்றை நன்கறிந்தவர்களுக்கு ஹெச்.வி.காமத்தின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த சூட்சமங்களும், சூனியங்களும் புரியும். 75 ஆண்டுகால சுதந்திரத்திற்கு பிறகு இன்று அந்த நிலையில் இவ்விவாதத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது.

பாஜக ஆட்சியில் இருப்பதை ஏன் சிறப்புத்தன்மைவாய்ந்த ஒரு கருதுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், தத்துவார்த்தத்தில் இதற்கு முன்பான குழுக்கள் எல்லாமுமே கூட மத்திய – மாநில உறவுநிலைகளை குறித்துதான் ஆராய்ந்தன என்றாலும்கூட, எதார்த்தத்தில் அவை காங்கிரஸும், இதரத்தரப்புகளும் நடத்திக்கொண்ட விவாதம் தான்.

ஆனால், இம்முறை காங்கிரஸ் இவ்விவாதத்தில் அதிகார முகமாக அல்ல, உரிமைகளை கேட்கும் தரப்புகளின் பக்கம் நிற்க வேண்டிய சூழல் இருக்கிறது. எந்தக்கட்சி தனக்காக, தன் நோக்கில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதாக விமர்சிக்கப்பட்டதோ, அதே கட்சி சீர்குலைவுகளை சரிசெய்ய எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவாக நிற்கும் சூழல் என்பது வரலாற்றுத் திருப்புமுனை. இந்தத்திருப்புமுனையின் கூர்மையை புரிந்துகொண்டால் இன்றைய சூழலின் முக்கியத்துவம் நமக்குப் புரியும்.

காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பதைப் போலவே, கூட்டாட்சி விவாத வரலாற்றின் மையவிசையாக இருந்த இன்னொரு சக்தியும் இல்லாமல் போயிருக்கிறது. அதுதான் காஷ்மீர். விடுதலைக்கு முன்பும், பின்புமான கால்நூற்றாண்டுக் காலத்தில் சுயாட்சியின் குரல் என்பது ஒன்றிய வல்லாண்மையைக் குறைத்து, பிராந்தியங்கள் தங்களுடைய சுயாதினத்தை பெருக்கிக்கொள்வதற்கான குரல்களாகவே இருந்திருக்கின்றன.

ராஜமன்னார் கமிட்டி!

ஆனால், 1980-களுக்குப் பிறகு கூட்டாட்சி – சுயாட்சி குரல்களின் மிக முக்கியமான வினையூக்கித்தரப்பே காஷ்மீர் தான். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றிய அரசின் ராணுவ நடவடிக்கைகள், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புகள், நிச்சயமின்மை மிக்கதாய் மாறிய மாநில அதிகாரத்தால் உண்டான குதிரைபேரம் உள்ளிட்ட ஜனநாயக சீரழிவுகள் இவை அனைத்தும்தான் அவ்விவாதத்தின் அரசியல் கூட்டுவிசைகளை உண்டாக்கியது என்றாலும் காஷ்மீரே இந்த மூன்றாம் கட்டத்தின் மையமாக இருந்தது.

இந்தியா என்பதன் தேசியப்பொருண்மையை அனைத்துவழிகளிலும் கேள்விக்குள்ளாக்கும் கேந்திரமாக இருந்த காஷ்மீர் – பிரிவினை, இன தேசிய அடையாளங்கள், சமூக நீதி, தேசிய இன இறையாண்மை, துணைதேசியவாதத்தைத் தாண்டிய தேசிய நீரோட்டக்களம், ஒற்றைக்கட்சி ஆட்சிக்கு எதிரான அரசியல் நடவடிக்கை, இலக்குப்பூர்வமான கூட்டணி ஆட்சி என்கிற புதிய அத்தியாயம் என பலவழிகளில் நடந்த விவாதம் அது. கூட்டாட்சி விவாத வரலாற்றில் கணிசமான அரசியல் வெற்றிகள் பெறப்பட்டதும் இக்காலகட்டத்தில் தான்.

1990-களிலிருந்து மெல்ல இவ்விவாதத்தின் மையத்திலிருந்து நழுவத்தொடங்கிய காஷ்மீர், 2019 ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியத் தீர்மானத்தின் மூலம் கிட்டத்தட்ட முடித்துக்கட்டப்பட்டது.

காஷ்மீரை மாநில அந்தஸ்த்திலிருந்து நீக்கியது என்பது ஜம்மு – காஷ்மீரிகளுக்கு இறையாண்மை இழப்பு என்றால், காஷ்மீரை மையமாகக் கொண்டு விரிவடைந்திருந்த கூட்டாட்சி விவாத வரலாற்றுக்கு அது தேசிய இழப்பு. காங்கிரசும் இல்லாமல், காஷ்மீரும் இல்லாமல், பற்றியெரிந்த மணிப்பூர் சுவடுகளுக்கு நடுவே வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் புதிய கோலோச்சலுக்கு நடுவே இவ்விவாதத்தை நடத்துவது என்பது மிக மிக வித்யாசமான அனுபவமாகத்தான் இருக்கப்போகிறது.

ஆனால், இவ்விவாதத்தின் மையத்தை தீர்மானிக்கப்போவது மேல் உள்ள இரண்டையும் விட மூன்றாவதாக மற்றொரு காரணியே. 1969ல் ராஜமன்னார் கமிட்டி அமைக்கப்பட்ட போது திமுக அதை தனது வடக்கு vs தெற்கு அரசியலின் ஒரு பகுதியாகவே பேசியது. ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கை குறித்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் விவாதமே வடக்கு vs தெற்கு என்ற திமுகவின் குரலுக்கும், சுயாட்சி முழக்கத்தை பிரிவினை வாதமாக கருதும் எதிர்க்கட்சிகளின் குரலுக்குமான போட்டியாக அமைந்திருந்தது.

வடக்கு vs தெற்கு!

குறிப்பாக, ‘சுயாட்சி’ என்கிற சொல்லே சொல்லப்படக்கூடாது என்றும், அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்துவதே பிரிவினை வாதத்துக்கான அரசியல் நோக்கம் தான் என்றும் கூட திமுக அரசுக்கு எதிராக அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆச்சர்யகரமாக இத்தகைய வாதங்களை முன்வைத்தவர்கள் காமராஜர் மற்றும் இந்திரா காங்கிரஸ், ராஜாஜியின் சுயராஜ்ஜிய கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல.

சில மாதங்கள் முன்புவரை திமுகவினராக இருந்து, எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கியதும் அதில் இணைந்த பழைய திமுகவினரே கூட ‘சுயாட்சி’ என்கிற சொல்லைக் குறித்து ஆட்சேபகரமான பிரிவினை அச்சத்தை எழுப்பினர். மறுபுறம் திமுகவின் சார்பில் பேசிய ஆலடி அருணா போன்றவர்கள், இந்த அரசியலமைப்புச் சட்டமே இனி அடியோடு மாற்றப்பட வேண்டும் என்ற குரல்களை முன்வைத்தார்கள்.

ஆனால், இன்று வடக்கு vs தெற்கு என்பதாக மட்டும் இவ்விவாதத்தை முன்வைக்க முடியாது. காங்கிரஸின் ஒற்றையதிகாரம் கொண்டிருந்த பாரபட்சமான அணுகுமுறைக்கும், பாஜக கொண்டிருக்கும் பாரபட்சமான அணுகுமுறைக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.

தங்கள் கட்சி அல்லாத வேறு ஒரு எந்த ஒரு சக்தியும் செல்வாக்குமிக்க ஆட்சியதிகாரத்தை கொண்டிருக்கக்கூடாது என்பது பழைய காங்கிரஸின் உத்தியாக இருந்தது. ஆனால், பாஜக அப்படி இயங்கவில்லை. நுட்பமாக, எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், தங்களது இந்துத்துவ லட்சியத்தை பிரதிபலிக்கும் திட்டங்கள், நடைமுறைகளை ஊக்குவிக்கும் அரசின் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு ஊக்குவிக்கிறது.

இந்துத்துவ லட்சியத்துக்கு அப்பாற்பட்ட வரன்முறைகளுக்குள் வேறு எந்தக்கட்சியும் செல்வாக்கு பெற்று வளர்ந்துவிடாமலும் ஒடுக்குகிறது. இதன்மூலம், தங்கள் எதிரிகளும் தங்களது லட்சிய எல்லைக்குள்ளேயே நின்று விளையாடுவதை பாஜக உறுதி செய்துக்கொள்கிறது.

இந்தியாவின் எந்த அரசும், ஒன்றியம் முதல் பஞ்சாயத்து அமைப்புகள் வரை இந்துத்துவ ஓர்மைப்படுத்தலின் லட்சியத்துக்கு கீழாக இயங்குவதை உறுதிசெய்யும் இந்த உத்தி என்பது மிக அபாயகரமானது. இந்திய அதிகாரவர்க்கத்தையும், அதிகாரவர்க்கத்தின் பொருட்டு இயங்கும் தொழில்முறை சமூக சங்கிலிகளையும் நிரந்தரமாக தங்கள் வசம் வைத்திருப்பதற்கான திட்டமிது

இந்துத்துவ லட்சியம்!

ஏப்ரல் 15 அன்று குரியன் கமிட்டியை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பிரதானமாக முன்வைத்த குற்றச்சாட்டு என்பதே நீட் விலக்கு மற்றும் புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு மறுக்கிறது என்பதுதான்.

ஆனால், இத்தகைய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் திமுக அரசின் மீதே, இந்துத்துவ சக்திகள் வலிமை பெறும்வகையிலான திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பிறகட்சிகள் தமிழ்நாட்டில் முன்வைக்கவே செய்கின்றன.

உதாரணமாக, பள்ளிக்கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஆன்ம பயிற்சி, யோகா உள்ள மனவியல் கலைகளை கற்றுக்கொடுக்கும் பயிற்சியை ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு மிக நெருக்கமான ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அமைப்பு தான் தமிழ்நாடு பள்ளிகளில் மேற்கொண்டு வருகிறது. நிதி ஆதாரங்களின் பொருட்டும், நவீன மாற்றங்களை உள்வாங்குவதன் பொருட்டும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த விளையும்போது, அதற்கான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு பல முடிச்சுகளை பாஜக அரசு உருவாக்குகிறது.

அதன்மூலம், தங்களது இந்துத்துவ லட்சியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்துவிதமான அரசு நடவடிக்கைகளுக்கும் வெற்றிகரமாக கொண்டுவருகிறது. ஆர்.எஸ்.எஸ் – பாஜக தொடர்புவட்டத்திலிருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள், சமூக அமைப்புகள், வணிக நிறுவனங்கள் இவற்றுக்கான இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. அல்லது ஒன்றிய அரசால் உருவாக்கப்படும் இத்தகைய திட்டங்களை மோப்பம் பிடித்து அதற்காகவே புதிய அமைப்புகள், நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. நிதி ஆதாரங்கள் தேவை என்பதற்காக பாஜக அல்லாத அரசுகள் திட்டங்களை நிறைவேற்றும்போது அதை பயன் எல்லைகளை இந்துத்துவ அரசியல் பண்பாட்டு, வணிகத்தளத்தில் அறுவடை செய்கிறது.

ஆனால், இதன் மிக மோசமான விளைவை மாநில அரசுகள் சுமக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. நிதி ஆதாரச் சிக்கல்களுக்காக பாஜகவின் இந்துத்துவ லட்சியங்களை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொள்வதன் மூலம், பாஜகவுக்கு எதிரான அரசியலை பேசும் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்புக்குரலின் மதிப்பை இழக்கின்றன. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழியான பேர அரசியலோடு இதை பாஜக செய்யும்போது, பாஜக எதிர்ப்பு அரசியலை மழுங்கடித்து பிறகுரல்களை மெல்ல நிர்மூலமாக்குகிறது.

இரண்டாவது சிக்கல், ஒட்டுமொத்த நிர்வாக இயக்கத்தையும் ஒற்றைத்தன்மை மிக்கதாக மாற்றிவரும் பாஜக அரசு, நிதி ஆதாரங்களிலும் – திட்டங்களை முன்னகர்த்துவதிலும் கைவைப்பதன் மூலமாக இந்துத்துவ லட்சியங்களை மறைமுகமாக நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் தங்கள் கட்சிப்பிடியை வலுவாக நிலைநிறுத்துக் கொள்கிறது.

மாறாக அதற்கான விலையை மாநில அரசுகள் கொடுக்கின்றன. நுட்பமாக, ஒன்றிய ஆட்சியை நோக்கி திரும்பவேண்டிய அதிருப்தி அலைகள் – ஆட்சிக்கு எதிரான மனநிலைகளை மாநில அரசுகள் இதனால் சுமக்கின்றன. அதிகாரக்குவியலுக்கும், நிர்வாக எதார்த்தத்திற்கு இடையே நடக்கும் உளவியல் விளையாட்டு இது. பாஜகவின் வெற்றிகரமான இச்சாணாக்கியத்தனத்தை எதிர்கொள்வது இந்திய அரசியலுக்கே புதிய அனுபவமாக இருக்கிறது. 

கூட்டாட்சி விவாதங்களை காங்கிரஸ் அணுகியதுபோல பாஜக அணுகுவதில்லை. காங்கிரஸ் சுயாட்சி அதிகாரக்குரல்களை பிரிவினை வாதம் என்றோ, இந்தியாவுக்கு எதிரான குரல் என்றோ நிராகரிப்பதையே பெரும்போக்காகக் கொண்டிருந்தது.

ஏகாபதிபத்திய ஆதிக்கம்!

அதையும் தாண்டி, காங்கிரஸைச் சேர்ந்த மாநிலத்தலைமைகளே சிக்குலுக்குள்ளாகும் அரசியல் வலுவடைந்தாலும், நீண்ட ஒற்றைக்கட்சி ஆட்சிக்கு எதிரான பொதுப்புத்தி வலுவடைந்ததாலேயுமே எதிர்க்கட்சிகளால் நிர்வாகச் சீர்திருர்த்த ஆணையம் 1968, ராஜமன்னார் கமிட்டி 1966, சர்க்காரிய கமிஷன் 1983, பூஞ்ச் கமிஷன் 2007 என வெவ்வேறு கமிட்டிகளின் வழியே ஆளுநர் அதிகாரம், மாநில அரசுகளை கலைக்கும் 356, தேர்தல் வெற்றிக்குப் பிறகு யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பதைத் தீர்மானித்தல், நிதி ஒதுக்கீடு, கடன் மேலாண்மை போன்ற மிக மிக அடிப்படையான ஜனநாயக அடித்தள உரிமைகளிலேயே மாநிலங்கள் தெளிவுற முடிந்தது.

ஆனால், பாஜக தாங்கள் கடைபிடிப்பதே உண்மையான கூட்டாட்சி என நம்புகிறது – முன்வைக்கிறது. ‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும் மோடி, ஒன்றிய அரசின் லட்சியங்களுக்கு துணை இருப்பதே மாநில அரசுகளின் வேலை – அதற்கேற்பவே நமது அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது என மறைமுகமாக நிலைநாட்டி வருகிறார்.

கூட்டாட்சி விவாத வரலாற்றிலும் இது ஒரு புதிய சிக்கல். இச்சிக்கலை பேசவேண்டிய நேரத்தில் தமிழ்நாடு ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்தியிலும் நிற்கிறது. அது சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு.

சுயாட்சி, சுயமரியாதை இந்த இரு சொற்களும் பிரிக்க முடியாத வரலாற்றுத்தொடர்புடையவை. ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான தேசிய விடுதலை முழக்கத்தின் லட்சியமாக உருவெடுத்த சொல் பூரண சுயராஜ்ஜியம்.

பூரண சுயராஜ்ஜியத்தின் நிர்வாகவியல் சொல்லாகத்தான் சுயாட்சி என்பதை தேசியவாதிகள் பயன்படுத்தி வந்தனர். தேசிய இயக்கத்துக்கு முன்பு கல்கத்தா, மும்பை, சென்னை பிரிட்டிஷ் மாகாண அரசுகளாக இருந்தபோதிலிருந்தே நடைமுறை புழக்கத்துக்கு வந்துவிட்ட ஓர் நிர்வாக அதிகாரச் சொல் ‘சுயாட்சி’. ஏகாபதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை சொல்லான பூரண சுயராஜ்ஜியத்துக்கு மாற்றாக, சமூக விடுதலைக்கான சொல்லாக பெரியார் முன்வைத்ததே சுயமரியாதை என்பதாகும்.

சமூகநீதி குரல்!

கடந்த 2018ம் ஆண்டோடு இந்தியாவில் இரட்டை ஆட்சி அடிப்படையில் நடைமுறைக்கு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தின் பொருட்டு கூட்டாட்சி அரசியலின் நூற்றாண்டு நிறைவடைந்தது. (கூட்டாட்சியின் நூற்றாண்டு குறித்து மின்னம்பலத்தில் 2018-19 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்) பெரிய கவன ஈர்ப்பில்லாமல் கடந்துசெல்லப்பட்ட கூட்டாட்சியின் நூற்றாண்டு குறித்த அசைபோட இது ஒரு மறுவாய்ப்பு.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு அனுசரிக்கப்படும் இந்த ஆண்டில் இவ்விவாதத்தை நடத்துவது என்பது இந்துத்துவ ஆதிக்கத்துக்குள் இந்திய அதிகாரம் சிக்கிக்கொள்ளாமல் தடுப்பதற்கான சமூகநீதி குரலாகவும், ஒற்றை அதிகார குவிப்புக்கு எதிரான சுயாட்சிக்கான குரலாகவும் இணைந்து ஒலிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

அவ்வாய்ப்பின் வழியே இரண்டு வலிமையான கேள்விகளின் மூலம் இவ்விவாதத்தை தொடங்க வேண்டியிருக்கிறது.

ஒன்று, ஒன்றிய அரசுக்கு அளிக்கும் வாக்குக்கும், மாநில அரசுக்கு அளிக்கும் வாக்கும் வேறுவேறு மதிப்பு என்கிற கொடும் சூழலில் ஒரு ஓட்டுக்கு இரண்டு மதிப்புள்ள இறையாண்மை என்கிற இழிவான சூழலை எப்படி களைவது?

இரண்டு, அரசியலமைப்பின் மிக அடிப்படையான குடியுரிமை சமத்துவம் என்பதை கட்சி – கொள்கை மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றிய – மாநில உறவுநிலைகளில் உறுதிசெய்வது எப்படி?

நிதி முதல் நீதி வரையிலான பரந்த கூட்டாட்சி விவாதத்தில் இந்த இரண்டு கேள்விகளே இம்முறை முதன்மையாக இருக்க வேண்டும். autonomy debate at the crossroads

கட்டுரையாளர் குறிப்பு

விவேக் கணநாதன்,
சமூக அரசியல் ஊடகவியலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share