ADVERTISEMENT

ராகுல் நடைப் பயணம் ஏன்?: அழகிரி விளக்கம்!

Published On:

| By Jegadeesh

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வெற்றி பயணத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா வில் இன்று (ஆகஸ்ட் 30 ) நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்து கொண்டு கே.எஸ். அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

“காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்குகிறார்.

ADVERTISEMENT

குமரியில் காந்தி, காமராஜர் நினைவு மண்டபத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு தொடங்கும் இந்த பயணம் 150 நாட்கள் கடந்து காஷ்மீர் வரை சென்றடைகிறது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

அரிசியும், கோதுமையும்

மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக உத்தரபிரதேசத்தில் அடித்துக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் தகர்த்து எறிவதற்காகவே எங்கள் தலைவர் நடைபயணம் தொடங்குகிறார்.

நாட்டில் அரிசியையும், கோதுமையும் தான் ஏழைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளார்கள். ஆனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறுகிறார்.

நலிவடைந்த பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் நலிவடைந்து இருக்கிறது. இதற்கு மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் குறைந்துவிட்டது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபம் தருவேன் என்று கூறினார். ஆனால் விவசாயம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது.

கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். ஆனால் தரவில்லை. கல்வியில் முன்னேற்றம் இல்லை. மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. எந்த மாமிசத்தை உண்ணவேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு கட்டுப்படுத்துகிறது.

சர்வாதிகார பா.ஜ.க

சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இன்றைய சூழலில் நம் பொருளாதார நிலை என்ன? மன்மோகன் சிங் ஆட்சியில் 9.2 சதவீதம் ஜி.டி.பி. உயர்ந்தது. ஆனால் இன்று வெறும் 7 சதவீதம் தான் உயர்ந்துள்ளதாக கணக்கு காண்பிக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் முக்கியம், தனியார் துறையும் முக்கியம்.

கலப்பு பொருளாதாரம்

கலப்பு பொருளாதாரம் தான் நாட்டை உயர்த்தும். பா.ஜ.க. ஆட்சியில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்லும் போது விஷத்தை கக்கி விட்டு தான் செல்வார்கள். அது போல குலாம்நபி ஆசாத்தும் பேசி உள்ளார்.

கட்சியில் முக்கிய பதவிகள் வகித்த அவர் கட்சியை குறித்து பேசாமல் இருப்பது தான் நல்லது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காங்கிரசை வழிநடத்தினார். அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் வருவார். தலைவர் தேர்தலுக்கும், செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கும் நடைபயணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பங்கேற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பான ஆட்சி

சென்னையில் எங்கு விமான நிலையம் வர வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு தான். விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும்தமிழ்நாட்டில் தி.மு.க. சிறப்பாக ஆட்சி நடத்துகிறது.

ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்கிறார்கள். ஆங்காங்கே இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து கொள்கிறார்கள்.

மோடியின் விவசாய காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதி விவசாயிகள் மட்டுமே செல்வாக்கு உள்ள விவசாயிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். எனவே விவசாய காப்பீட்டு திட்டம் என்பது தோல்வி தான் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர் எம்.பி , ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , தங்கபாலு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மோடி படத்தை ஒட்டியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share