கூகுள் நிறுவனத்திற்கு 315 கோடி ரூபாய் அபராதம்.. முழு பின்னணி இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Australian court fines Google Rs 315 crore

பிரபல இணைய தேடு பொறி நிறுவனமான கூகுளுக்கு ரூ.315 கோடி அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இணையம் பயன்படுத்துபவர்களின் முதல் தேர்வாக உள்ள கூகுள் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா மற்றும் ஆப்டஸ் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் டிசம்பர் 2019 முதல் மார்ச் 2021 வரை ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தங்களின்படி, இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விற்பனை செய்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் தேடுபொறி மட்டுமே முன்பே நிறுவப்பட்டு, இயல்புநிலை தேடுபொறியாக (default search engine) அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், பிற போட்டியிடும் தேடுபொறிகள் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்காக விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கூகுள் நிறுவனம் டெல்ஸ்ட்ரா மற்றும் ஆப்டஸ் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலியாவின் தேடு பொறி சந்தையில் போட்டியை கணிசமாக குறைத்ததாக ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) குற்றம் சாட்டியது.

ADVERTISEMENT

இதுகுறித்த வழக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடந்த நிலையில் டெல்ஸ்ட்ரா, ஆப்டஸ் மற்றும் மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான TPG ஆகியவை 2024 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ACCC-யுடன் உறுதிமொழிகளை அளித்து, கூகுளுடன் பிரத்தியேக தேடுபொறி ஒப்பந்தங்களை புதுப்பிக்கவோ அல்லது புதியவற்றை உருவாக்கவோ மாட்டோம் என்று உறுதியளித்துள்ளன.

இந்நிலையல் 55 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (ரூ.315 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கு, உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் நடவடிக்கைகள் மீதான ஒழுங்குமுறை கண்காணிப்பின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இதேபோன்ற வழக்குகள் இந்தியா (CCI ஆல் 2,274 கோடி ரூபாய் அபராதம்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (5 பில்லியன் டாலர் அபராதம்) கூகுள் மீது தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share