தற்போது ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இந்த தொடரில் முதல் 2 போட்டிகளை அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா, 2-0 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 7) எடின்பர்க்கில் உள்ள கிரான்ஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில், ஆஸ்திரேலியா – ஸ்காட்லாந்து அணிகள் களமிறங்கின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சே நல்ல துவக்கம் கொடுத்து 25 ரன்கள் சேர்த்தார். மற்றோரு துவக்க ஆட்டக்காரர் ஓலி ஹேர்ஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன், கடந்த போட்டியில் தனியாளாக போராடி அரைசதம் அடித்தது போல, இந்த போட்டியிலும் 56 ரன்கள் சேர்த்தார்.
ஆனால், அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியாவுக்காக கேமரூன் கிரீன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, பிரஷர்-மெக்கர்க் டக்-அவுட் ஆகியும், டிராவிஸ் ஹெட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தும் வெளியேறினர்.
ஆனால், அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறத்தில், மிட்சல் மார்ஷ் (31 ரன்கள்), டிம் டேவிட் (25 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஆனால், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்த கேமரூன் கிரீன், ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 3-0 என தொடரை கைப்பற்றி ஸ்காட்லாந்தை வைட்-வாஷ் செய்துள்ளது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேமரூன் கிரீன் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
அரசாங்கப் பள்ளிக்குள் ஆலகாலம் விற்பதா?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் : விஜய் மகிழ்ச்சி!