டெல்லி புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் மதுபான நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், இன்று (நவம்பர் 11) அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இவ்வரசில், மதுபான விற்பனை கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இந்த நிலையில், டெல்லியின் கலால் கொள்கை 2021-22ஆம் ஆண்டு செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரியிருந்தார்.
இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருப்பதுடன் விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்த நவம்பர் 7ஆம் தேதி டெல்லி, பஞ்சாப் , ஹைதராபாத் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த நிலையில், பெர்னார்ட் ரிக்கார்ட் மதுபான நிறுவன பொது மேலாளர் பினாய் பாபு, அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி உள்ளிட்ட 2 பேரை அமலாக்கத் துறை இன்று கைது செய்துள்ளது.
புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் இந்த 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, மதுபான உற்பத்தி நிறுவனமான இண்டோஸ்பிரிட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் மஹந்த்ருவையும் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்