பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Auditor Gurumoorthy’s Surprise Meet with Dr. Ramadoss
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஜூன் 5-ந் தேதி ராமதாஸை சந்தித்துவிட்டு அன்புமணி புறப்பட்டுச் சென்ற உடன், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் வருகை தந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கிறார். மதுரையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறாராம்.
இது தொடர்பாக ராமதாஸிடம் பேசி, பாமகவை பாஜக கூட்டணியில் இடம் பெற வைப்பதற்காகவே ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக அமித்ஷா கடந்த ஏப்ரல் 11-ந் தேதி சென்னையில் பாஜக- அதிமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போதும் அமித்ஷாவை சந்திக்க அன்புமணி விரும்பினார். ஆனால் ஏப்ரல் 10-ந் தேதியன்று பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அமித்ஷாவை அன்புமணி சந்திக்கவில்லை.
பாமகவில், ராமதாஸைப் பொறுத்தவரையில் அதிமுகவுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற நிலைப்பாட்டுடன் உள்ளார். ஆனால் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதலுக்கு மிக முக்கிய காரணமும் இந்த கூட்டணி விவகாரம்தான். இதனை ராமதாஸ், பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பிலும் விவரித்திருந்தார்.
இந்த பின்னணியில், மதுரைக்கு அமித்ஷா வருகை தரும் நிலையில் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.