பிபிசி செய்தி நிறுவனம் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
பிபிசி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெளியிட்ட ஆவணப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்து வரும் நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் இயங்கி வரும் பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 14 ) சோதனையில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இது சோதனை அல்ல என்றும், கணக்கு ஆய்வு என்றும் தெரிவித்துள்ளது.
தாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி தங்கள் வருமானத்தை மடைமாற்றுவது நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இது குறித்து வருமானவரித் துறை பலமுறை அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் எனினும், பிபிசி தொடர்ந்து இந்த விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்த பிபிசி, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தங்கள் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சோதனை விரைவில் முடிவடையும் என நம்புவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரூ.1000 – ரூ.5000 கொடுக்கிறார்கள்: டெல்லிக்குப் புகாரைத் தட்டிய அண்ணாமலை