நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விருமன்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் இன்று ( ஆகஸ்ட் 3 ) மாலை வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்குபவர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் படங்கள் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.
முத்தையா இயக்கியத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது . குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா இயக்கியுள்ளார் இந்த படம்தான் விருமன்.

இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் மதுரையில் இன்று ( ஆகஸ்ட் 3 ) நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுகிறது.
இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்குடன் இயக்குனர் சங்கரும் கலந்து கொள்கிறார். கொம்பன் திரைப்படம் போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விருமன் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப் படத்திற்கான ஒளிப்பதிவை செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார்.
‘விருமன்‘ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
