”ரிசைன் பண்ணிடுங்க”- பிடிஆருக்கு ஸ்டாலின் உத்தரவு!

Published On:

| By Aara

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பேசியதாக இதுவரை வெளியான இரண்டு ஆடியோக்கள் திமுகவின் தலைமையிலும் முதலமைச்சர் குடும்பத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆடியோக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக, பாஜக ஆகிய எதிர்க் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் பிடிஆர் பற்றிய இரண்டாவது ஆடியோ ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூலம் வெளியான நிலையில்… இங்கிலாந்தில் இருந்து சபரீசன் பிடிஆரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தவர்,  ‘இப்போதைக்கு  நீங்க ரிசைன் பண்ணிடறது நல்லது’ என்று சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், ’இது என்னுடைய குரல்  அல்ல.  நீங்கள் உங்கள் ரெய்டு சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்று  சற்று டென்ஷனாகவே தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் பிடிஆர். அப்போது அங்கே முக்கியமான அதிகாரிகளுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார் முதலமைச்சர். 

ADVERTISEMENT

அமைச்சர் பிடிஆர் வந்திருக்கிற தகவல் முதலமைச்சருக்கு சொல்லப்பட்டதும் தன்னுடன் ஆலோசனையில் இருந்த ஒரு முக்கியமான அதிகாரியை அழைத்து,  ’அவரை ராஜினாமா செய்துவிட்டு விளக்கம் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த அதிகாரி முதலமைச்சரின் அறையில் இருந்து வெளியே வந்து, காத்திருந்த பிடிஆரிடம்  தெரிவித்திருக்கிறார். இதை ஏற்காத பிடிஆர் முதலமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து முதலமைச்சர் ஆலோசனை அறையில் இருந்து வெளியே வந்ததும் பிடிஆரை பார்த்திருக்கிறார். அப்போது பிடிஆர், ‘அண்ணே…’ என்று அழைத்து முதலமைச்சரிடம் சிறிது பேச முயன்றிருக்கிறார்.

அப்போது  இறுக்கமான முகத்தோடு காணப்பட்ட முதலமைச்சர்,  ’நீங்க ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என்று  நேரடியாகவே பிடிஆரிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

Resign Stalin's order to PTR

இதற்குப் பிறகு அமைச்சர் பிடிஆர் அடுத்த நாள் அதாவது நேற்று (ஏப்ரல் 26) பிற்பகல்  இரண்டாவது ஆடியோ குறித்த தனது விளக்கத்தை வீடியோ வடிவில் வெளியிட்டார்.

ஆனாலும் சபரீசன் மற்றும்  முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கூறியபடி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை. பிடிஆரின் இந்த விளக்கம் தமிழ்நாடு அரசின் செய்தித் துறை மூலம் தனிப்பட்ட செய்தியாக பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிடிஆர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனைகளை தொடர்ந்து வருவதாக சொல்கிறார்கள் திமுக உயர்மட்ட வட்டாரங்களில்.

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை -எடப்பாடி… டெல்லியில் அமித்ஷா தீர்த்து வைத்த கணக்கு!

“புதுவையில் பெண்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு”: தமிழிசை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share