மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பனி’ . இந்தத் திரைப்படம் கடந்த அக்.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே இந்தப் படத்திற்கு கிடைத்தது. இந்த நிலையில், இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்த ஆதர்ஷ் என்கிற நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ‘முடிந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோது!’ என்றும் சவால் விடுத்துள்ளார் என்பது அந்த விமர்சகர் ஆதர்ஷ் வெளியிட்ட தொலைபேசி உரையாடலில் தெரிய வருகிறது.
இது தொடர்பாக விமர்சகர் ஆதர்ஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’பனி’ படத்தில் இடம்பெற்றிருந்த பாலியல் வன்கொடுமைக் காட்சி குறித்து நான் எதிர்மறையாக விமர்சனத்தை வெளியிட்டிருந்தேன். ஒரு திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமைக் காட்சியைக் காட்சிப்படுத்தும் போது, அது பார்வையாளர்களின் அனுதாபத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெண்களை காட்சிப் பொருளாக சித்தரிக்கும் வகையில் கிட்டத்தட்ட பி கிரேடு படத்துக்கு ஒப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை நான் சொன்னதற்காக ஜோஜு ஜார்ஜ் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , ‘தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது’ என மிரட்டல் விடுத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படுபவனில்லை. அவர் இதே போல் மற்றவர்களுக்கும் மிரட்டல் விடுக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த வீடியோவை வெளியிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தன் மீது வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் சட்ட ரீதியாக சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பிற்கும், வில்லன் வேடங்களுக்கும் பேர் போன ஜோஜூ ஜார்ஜ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘ஜகமே தந்திரம்’. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…