”பொறாமையோ வெறுப்போ வேண்டாம்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து முடித்துள்ள படம் துணிவு. H.வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், 2023 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
அதேபோல விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் லலித்குமார் வாங்கியுள்ளார்.
இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் என்கிற விவாதம் சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உங்களை எப்போதும் ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவர்களை, உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் தேவையற்ற விஷயங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
உங்கள் இலக்கை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே இருங்கள். எப்போதும் உற்சாகத்தோடு இருங்கள். இனி நல்லவைக்கான நேரம்! நேர்மறை எண்ணங்கள் மட்டும் மனதில் கொள்ளுங்கள்.
பொறாமையோ, வெறுப்போ வேண்டாம்! உங்களுக்குள் இருக்கும் சிறப்பான திறனை வெளிக்காட்டுங்கள். வாழு… வாழவிடு… அளவில்லா அன்புடன் அஜித்” எனப் பதிவிட்டுள்ளார்.
இராமானுஜம்
சர்ச்சையில் சிக்கிய பிரதீப்… துணிந்து வாய்ப்புக் கேட்ட பிரேம்ஜி