ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 16) ராமேஸ்வரம், குமரி, ஈரோடு, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அமாவாசை நாட்களில் தர்ப்பணம் அளித்தால் நம்முடைய பல தலைமுறை பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதனால் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடுவது சிறப்பு.
அந்த வகையில் ஆடி மாதத்தின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் அதிகாலை முதல் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இன்றைக்கு நாள் முழுவதும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
குமரி
கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சந்திக்கும் பகுதியில் பக்தர்கள் காலை முதலே புனித நீராடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
நாகை
நாகை மாவட்டம் வேதாரண்யம் , கோடியக்கரை ஆகிய இடங்களிலும் ஆடி அமாவாசையையொட்டி புனித நீராட பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதேபோல் திருச்செந்தூர் கடலிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
ஈரோடு
காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்