ADVERTISEMENT

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு!

Published On:

| By Kavi

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏலம் வழங்கியது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து நாயக்​கர்​பட்டி, வல்லாளபட்டி, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் டெல்லி சென்ற டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பாளர்கள், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து, நாளை மகிழ்ச்சியான செய்தி வெளியாகவுள்ளது என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஜனவரி 23), மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

“மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை, மதுரை கிராம அம்பலகாரர்கள் சந்தித்து அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் மண்டலத்தில் மரபுச் சின்னம் மற்றும் ஏராளமான கலாசார பாரம்பரிய இடங்கள் அடங்கியுள்ளன. எனவே, இந்த பகுதியில் அமைக்கப்படவுள்ள டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை கேட்ட மத்திய அமைச்சர் பல்லுயிர் சூழலியல் மண்டல பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும். பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலம் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று சுரங்கத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மதுரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share