ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் செயலி மூலமாக மட்டுமே மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவேட்டினை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அது தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், “2023 ஜனவரி மாதம் பள்ளி தொடக்க நாளில் இருந்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்குமான வருகைப் பதிவேடு TNSED attendance என்ற செயலி மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு முன்னால் TNSED Schools என்ற செயலியைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபயோகிப்படுத்திக்கொண்டு இருந்தனர். தற்போது அதனை எளிமைப்படுத்தும் விதமாக இந்த புது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய செயலியான TNSED Schools செயலியிலிருந்து வெளியேறி TNSED attendance செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உபயோகப்படுத்திய அதே பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவு செய்துகொள்ளலாம்.
இதில், பள்ளி வேளை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு மாறியமைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இருவேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
இதனால் பள்ளி ஆசிரியர்கள், வேலை ஆட்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு கடந்த ஆகஸ்ட் 1 முதல் TNSED Schools என்ற செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
வங்கதேச டெஸ்ட்: ரிஷாப், ஸ்ரேயாஸ் இணையால் நிமிர்ந்தது இந்தியா










