யோகா நிகழ்ச்சியின் போது தாக்குதல்!

Published On:

| By admin

இன்று உலகளவில் 8ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல யோகா தினத்தை முன்னிட்டு மாலத்தீவிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலத்தீவின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஒரு கும்பல் திடீரென்று நுழைந்து யோகா செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் அமைதியான முறையில் லட்சக்கணக்கானோர் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை மாலத்தீவு தலைநகர் மெலில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இந்நிலையில் அந்த மைதானத்திற்கு முன்பு சிலர் இந்த யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

ADVERTISEMENT

பின்னர் யோகா நிகழ்ச்சி தொடங்கி கலந்து கொண்ட அனைவரும் யோகா பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்துடன் மைதானத்துக்குள் நுழைந்து யோகா செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். போராட்டக்காரர்கள் கோஷமிட்டு கொண்டு உள்ளே நுழையும்போதே யோகா செய்து கொண்டிருந்தவர்கள் சிலர் அங்கிருந்து கிளம்ப முயன்றனர் ஆனால் அவர்களையும் வழிமறித்து போராட்டக்காரர்கள் தாக்குதல்கள் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து மாலத்தீவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் போது பலரும் இதை வீடியோ எடுத்தனர், அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share