முன்னாள் அமைச்சர் கார் மீது தாக்குதல்: சினிமா பாணியில் வேட்பாளர் கடத்தல்!

Published On:

| By Kalai

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் வேட்பாளரை கடத்திச் சென்றுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று(டிசம்பர் 19) மதியம் 2.30 மணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்தேர்தல் நடைபெற இருந்தது.

இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அதிமுக-வை சார்ந்த கவுன்சிலர்கள் 6 பேரும் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையின் குறுக்கே வந்து காரை நிறுத்திய சிலர்,  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.

ஒரு பாட்டிலில் ஆசிட்டை அடைத்து கார் மீது ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கரூர் மாவட்ட கவுன்சிலரும், அதிமுக சார்பில் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருந்த திருவிகா என்பவரையும் அடித்து, முகத்தில் துணியால் மூடி கடத்தி சென்று விட்டதாக விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார்.

இதனால் திண்டுக்கல் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கலை.ரா

விஜய் சேதுபதி வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

அம்மான்னா சும்மா இல்லடா..இந்த ஆண்டு அம்மாவான நடிகைகளின் லிஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share