மீண்டும் தாக்குதல் – இன்ஸ்டா பாஸ்வோர்டை மறந்த சின்னதுரை – என்ன நடந்தது?

By Kavi

|

Published on 17 Apr 2025, 5:35 PM

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். attack on Nanguneri Chinnadurai

கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சின்னதுரையை வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரிவாளால்  சரமாரியாக தாக்கினர். 

ADVERTISEMENT

இதனால் படுகாயமடைந்த சின்னதுரை பிளஸ் டூ தேர்வை மருத்துவமனையில் இருந்தவாறு உதவியாளர் துணையுடன் எழுதினார். 78% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 

ADVERTISEMENT

தற்போது சின்னதுறை கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 17) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சின்னதுரை தாக்குதலுக்கு உள்ளானதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

கொக்கிரகுளம் பகுதிக்கு தனியே சென்ற சின்னதுரையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு மொபைல் போனை பிடிங்கி சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சின்னதுரையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஏற்கனவே சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மீண்டும் தாக்கப்பட்டது நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, “சின்னதுரைக்கு ஆழமான காயங்கள் எதுவும் இல்லை. சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.

போலீசரின் முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் பழகிய நண்பர் பத்திரிகை வைப்பதாக கூறி அழைத்ததை ஏற்று  சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் தனது செல்போனை பறித்து சென்றதாகவும் போலீசாரிடம் சின்னதுரை கூறியிருக்கிறார். 

தொடர்ந்து காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளார்களிடம் கூறுகையில், “சின்னதுரை வீட்டிலிருந்து நண்பரை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார். அவரை செல்போனை பறிக்கும் நோக்கில் அழைத்துச் சென்று தாக்கியிருக்கலாம். அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். 

நெல்லை போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். 

அதில், “முனியாண்டி மகன் சின்னதுரை திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். தூய சவேரியார் கல்லூரியில் பி.காம் – corporate secretaryship துறையில் படித்து வருகிறார். நேற்று மாலை 6.15 மணி அளவில் நண்பரைப் பார்க்க பாளையங்கோட்டை வரை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். 

சுமார் 7:30 மணி அளவில் ஒரு நபரின் அலைபேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகில் உள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடம் சென்று சின்னதுரையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்த போது, கொக்கிரகுளம் அருகே வசந்தம் நகர் பகுதிக்கு சென்ற போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் பணம் கேட்டு மிரட்டி கட்டையால் அடித்து செல்போனை பிடுங்கி சென்று விட்டதாக தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சின்னதுரையின் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயர் மற்றும் கடவுச் சொல்லை போலீசார் கேட்டிருக்கின்றனர். ஆனால் அதை மறந்து விட்டதாக கூறியிருக்கிறார் சின்னதுரை. 

மீண்டும் நாங்குநேரியில் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சின்னதுரையின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதுரையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விசிகவை சேர்ந்த சஜன் பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், “என்ன நடந்தது என்று சின்னதுரையிடம் விசாரித்த போது அவர், வசந்தா நகர் சென்றபோது ஒருவன் நின்று கொண்டிருந்தான். 

அவன் யாரென்று எனக்கு தெரியாததால் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்ப முற்பட்ட போது அங்கே மறைந்திருந்த மூன்று பேர் என்னை சூழ்ந்து கொண்டு முட் கம்பால் என்னை அடித்தனர். அவர்கள் அரிவாளும் வைத்திருந்தனர். எனவே பக்கத்திலிருந்த வீட்டுக்கு ஓடி கதவைத் தட்டி உதவி கேட்டேன். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்’ என்று கூறினார்.

சில செய்திகளில் சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப் பகுதிக்கு வரவழைத்து தாக்கினர் என்று தவறான செய்தியை பரப்புகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.  attack on Nanguneri Chinnadurai

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel