பிஜேபி நட்டா கான்வாய் மீது தாக்குதல்! மேற்கு வங்காளத்தில் பதற்றம்!

Published On:

| By Balaji

ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்காள மாநிலத்தில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்றும் இன்றும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று (டிசம்பர் 10) மேற்கு வங்காளத்தில் பயணம் மேற்கொண்டபோது கொல்கத்தா அருகே, அவரது கான்வாயின் மீது கற்கள் வீசப்பட்டு பல வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாஜக தலைவர்களும் காயமடைந்தனர்.

பாஜக தலைவர் நட்டா இன்று கொல்கத்தா அருகே தெற்கு 24 பர்கானாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது காருடன் மாநில பாஜக தலைவர்களின் பல கார்கள் அணி வகுத்தன. இன்று மதியம் 12 மணியளவில் ஜேபி நட்டா காரின் முன்னும் பின்னும் அணிவகுத்துச் சென்ற கார்கள் மீது கற்களும், செங்கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. டயமண்ட் ஹார்பர் என்பது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனான, அபிஷேக் பானர்ஜியின் தொகுதியாகும். கற்கள் சரமாரியாக வீசப்பட்டதில் கார்களின் விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஜன்னல்கள் சிதறி விழுந்தன.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலைத் தாண்டி கூட்டத்துக்கு வந்த ஜேபி நட்டா, நான் கூட்டத்திற்கு இங்கு வந்திருப்பது துர்கையின் அருளால்தான். இந்த தாக்குதலில் முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் காயமடைந்தனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம். எங்கள் கான்வாயில் தாக்குதல் நடத்தப்படாத ஒரு கார் கூட இல்லை. குண்டு துளைக்காத காரில் பயணித்ததால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்போது கைலாஷ் விஜயவர்ஜியா, அவரது கையில் ஏற்பட்ட காயங்களைக் காட்டியபடி, “போலீஸ் முன்னிலையில், குண்டர்கள் எங்களைத் தாக்கினர், நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோமா இல்லை வெளிநாட்டில் இருக்கிறோமா என்பதைப் போல உணர்ந்தோம்”என்றார்.

ADVERTISEMENT

பாஜகவின் அகில இந்திய த்லைவரின் கார் அணிவகுப்பு தாக்கப்பட்டதால் மேற்கு வங்காள மாநிலம் முழுதும் பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, “இந்த சம்பவம் பாஜகவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கலவரம் செய்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக. அந்த அஜெண்டாவின் ஒரு பகுதியாக இதுபோன்ற செயல்களைச் செய்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நட்டா தூண்டுகிறார். யாராவது ஏதேனும் தவறு செய்திருந்தால், அவர்கள் எங்கள் தரப்பினராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் எங்கள் ஆதரவாளர்கள் பாஜக விரித்த இந்த வலையில் விழக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன் “என்று கூறியுள்ளார்.

பாஜகவின் மேற்கு வங்காளத் தலைவர் திலீப் கோஷ், “நட்டாவின் வருகை குறித்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தனியாக கடிதம் எழுதினேன். ஆனால் போலீஸார் இதை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். இன்று டயமண்ட் ஹார்பர் பகுதிக்குச் செல்லும்போது திரிணாமுல் ஆதரவாளர்கள் பல போராட்டங்களை நடத்துவார்கள் என்று எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது”என்று கூறியுள்ளார்.

ஆனால் மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கீம், “திலீப் கோஷ் சொல்வது முழு பொய். நட்டாவின் வருகை மாநில அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் சொந்த மத்திய பாதுகாப்புடன் வந்திருக்கிறார்கள். மாநில அரசுக்கு நட்டா தெரிவித்திருந்தால் நாங்கள் பாதுகாப்பை வழங்கியிருப்போம்” என்று பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே ஏற்கனவே முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

“ மாநிலத்தின் அரசியலமைப்பு பதவியில் இருப்பவன் என்ற முறையில் நட்டாவின் மீதான தாக்குதல் பற்றி வெட்கப்படுகிறேன். தலைமைச் செயலாளருக்கு இதுகுறித்து முன்கூட்டியே சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் அரசியல் சார்போடு நடந்துகொள்கிறது. பாஜக தலைவர் நட்டாவின் கான்வாய் மீதான தாக்குதல் பற்றி எடுத்த நடவடிக்கைகள் பற்றி தகவல் தருமாறு மாநில அரசைக் கேட்டிருக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share