சீமான் பேசிய பேச்சுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது போட்டிருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. At least 100 cases should be filed for Seeman speeches
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் ஆபாச வார்த்தைகளால் பேசியிருந்தார் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தமிழக டிஜிபிக்கு புகார் அனுப்பியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 16) நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் பேசிய பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக அவரது பேச்சை கேட்கவில்லையா? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ?என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி வேல்முருகன்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஏற்கனவே நான்கு வழக்குகள் தொடரப்பட்டு அவை எண்ணிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சீமான் பேசிய பேச்சு பென் டிரைவில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பென் டிரைவில் உள்ள சீமானின் பேச்சைக் கேட்ட பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தார். At least 100 cases should be filed for Seeman speeches