தெலுங்கில் மிரட்டும் அசுரன்!

Published On:

| By Balaji

அசுரன் தெலுங்கு ரீமேக்காக உருவாகிவரும் ‘நாரப்பா’ திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் அசுரன். வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த வருடம் அக்டோபரில் வெளியான இந்தத்திரைப்படம், எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. சாதிய அடக்குமுறை, நில அபகரிப்பு போன்ற கருத்துக்களை ஆழமாகப் பேசிய இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டீஜே அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசுர சாதனை புரிந்த இந்தத் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் மூன்று குழந்தைகளின் தாயாக மஞ்சு வாரியர் கையாண்ட வலிமையான கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் வெங்கடேஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரீமேக் படத்திற்கு **நாரப்பா** என்று பெயரிடப்பட்டுள்ளது.

போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வெங்கடேஷின் மிரட்டும் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share