யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மூலம்:
தன்னம்பிக்கை இருந்தால் தடைகள் தகரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வேண்டாம். மேலதிகாரிகளிடம் தர்க்கம் தவிருங்கள். குத்தல் பேச்சும் குதர்க்கமும் கூடவே கூடாது.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத்துணையிடம் சச்சரவு வேண்டாம். வாரிசுகளால் பெருமை உண்டு. அசையும், அசையா சொத்து சேரும். வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். கடன்களில் நேரடி கவனம் முக்கியம். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டு. வர்த்தக அனுமதியைப் பெறுவதில் அலட்சியம் கூடாது.
அரசுத்துறையில் உள்ளோருக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பணி நேரத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நீடிக்கும். மேலிடத்தின் பாராட்டு கிட்டும். மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. கலைஞர்கள், படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். தலைவலி, தூக்கமின்மை, கால்கள், பல் உபாதைகள் வரலாம்.பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.
பூராடம்:
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். புதிய பணி வாய்ப்பு திறமைக்கு ஏற்ப அமையும். உடனிருப்போரிடம் வீண் ரோஷம் தவிருங்கள்.
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். அது நிலைக்க விட்டுக்கொடுத்தல் நல்லது. வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை தவிருங்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்தும் சந்தர்ப்பம் வரும்.
அசையும் அசையா பொருள் சேரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. நேரான செயலும் நேர்மையும் முக்கியம். கடன்களை ஆடம்பரத்திற்கு வாங்க வேண்டாம்.
அரசியலில் உள்ளவர்கள் வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். கூடா நட்பை உடனே உதறுங்கள். அரசுத்துறையில் இருப்போர்க்கு நன்மைகள் அதிகரிக்கும். பலகால எதிர்பார்ப்புகள் ஈடேறத் தொடங்கும். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசுவழிப் பாராட்டு, பரிசு பெற வாய்ப்பு உண்டு. எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள். மாணவர்கள் எண்ணம்போல் ஏற்றம் உருவாகும்.
தொலைதூரப் பயணத்தை தனியே மேற்கொள்ள வேண்டாம்.
அஜீரணம், அல்சர், நெஞ்செரிச்சல், காய்ச்சல் உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.
உத்திராடம்:
வாக்கில் நிதானம் இருந்தால், வாழ்க்கை மணக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் சலிப்பைத் தவிருங்கள்.
குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வரவு அதிகரித்தாலும் செலவும் சேர்ந்து வரும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அதிக நெருக்கம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். நேரான செயல்களால் அது மேலும் வளரும்.
புதிய முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசியலில் உள்ளவர்கள் யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
அரசுப் பணிபுரிபவர்களுக்கு ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வையுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு பெயரும் புகழும் கிட்டும். வாய்ப்புகளை சின்சியராகச் செய்வது அவசியம். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும்.
வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.
முதுகு, கண்கள், அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு பிரகாசிக்கச் செய்யும்.
திருவோணம்:
முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். யாரிடம் பேசும்போதும் துணிவை விட பணிவே நல்லது. புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணிகளில் நேரம் தவறாமை முக்கியம். எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமாகலாம், புலம்பாமல் பொறுமை காப்பது நல்லது.
இல்லத்தில் ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிருங்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள் பேசவேண்டாம். தரல் பெறலில் அலட்சியம் கூடாது. சுபகாரியத்தில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் சீரான லாபம் கிட்டும். அது தொடர, நேரான செயல்கள் முக்கியம்.
அரசுத்துறையினர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு உண்டு. சட்டப்புறம்பு சகவாசத்தை சட்டென உதறுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வந்து சேரும்.
வாகனப் பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, முதுகு, பற்களில் உபாதை வரலாம். மாருதி வழிபாடு மங்களம் தரும்.
அவிட்டம்:
நிதானத்தால் நிம்மதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது.
வீட்டில் நிதானத்தைப் பேச்சில் கடைபிடித்தால், நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்.
கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். உங்களிடம் பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம்.
அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். படைப்பாளிகள். வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். சிவன் பார்வதி வழிபாடு சீரான நன்மை தரும்.
சதயம்:
திட்டமிட்டுச் செயல்பட்டால், திறமை வெளிப்படும் காலகட்டம். அலுவலகத்தில் முடங்காமல் உழைத்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.
தேவையற்ற கடன் பெறவோ தரவோ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். ஆடை ஆபரணம், அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தளர்ச்சி இல்லா உழைப்பு இருந்தால், வளர்ச்சி சீராகும். செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள்.
அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர் அலட்சியம் தவிர்த்தால் அதீத நன்மைகளைப் பெறுவீர்கள்.
படைப்பாளிகள் முழு முயற்சி இருந்தால், வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். திருமலையான் வழிபாடு தித்திக்கச் செய்யும்.
பூரட்டாதி:
உழைப்பினால் உயர்வினைப்பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தால், உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். வாரிசுகள் வாழ்வில் நல்லவை நடக்கும். தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம்.
அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள். மாணவர்கள் மறதியை விரட்ட, தினம்தினம் படியுங்கள். படைப்பாளிகளுக்கு திறமை பளிச்சிடும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சட்டதிட்டங்களை தவறாமல் கடைபிடியுங்கள்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நல்லவை தரும்.
உத்திரட்டாதி:
அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பணியில் அலட்சியம் கூடாது. பிறரைக் குறை சொல்வது, உங்களுக்கே எதிர்மறையாக மாறிவிடலாம், எச்சரிக்கை தேவை. பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம்.
வீட்டில் விசேஷங்கள் வரக்கூடிய அறிகுறிகள் தெரியும். வீண் ரோஷத்தால் உறவுகளை உதறவேண்டாம். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆண் பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். தரல் பெறலில் நேரடி கவனம் முக்கியம். செய்யும் தொழிலில் நேரான செயலும் நேர்மையும் முக்கியம். வர்த்தகம் சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் அலட்சியம் கூடாது.
அரசியலில் இருப்பவர்கள் வீண் வாக்குறுதிகளைத் தவிருங்கள். உயரதிகாரிகள் அனுமதி பெறாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவீர்கள். பணவிஷயத்தில் கவனமாக இருங்கள்.
படைப்புத் துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறுவீர்கள். முறையாகத் திட்டமிட்டால் அரசுவழி பாராட்டும் பெறுவீர்கள். மாணவர்கள் மறதிக்கு இடம்தராமல் இருப்பது முக்கியம்.
இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். ஒற்றைத் தலைவலி, ரத்த நாள உபாதை, கழுத்து வலி வரலாம். அங்காளம்மன் வழிபாடு அல்லல் போக்கும்.
ரேவதி:
பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உயரதிகாரிகளால் உணரப்படும். எந்த சமயத்திலும் சரியான திட்டமிடல் இருந்தால், இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரும்.புதிய பணி தேடுவோர், வீண் ரோஷம் தவிருங்கள். பணி கைகூடி வரும் முன் பகட்டு வேண்டாம்.
இல்லத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க வாய்ப்புகள் வரும். கடன்கள் சுலபமாக அடைபடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். தொழிலமைப்பில் அவசர முதலீடுகள் தவிருங்கள்.வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்.
அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் கட்டளைகளை கனவிலும் மீறவேண்டாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு பெருமை தரும்.
படைப்புத் துறையினருக்கு முயற்சிகளுக்குப் பலன்கிடைக்கத் தொடங்கும். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு உயர்வுகள் உருவாகத்தொடங்கும்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம். முதுகு, அடிவயிறு, தோள்பட்டை, ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை உபாதைகள் வரலாம். மகான்கள் வழிபாடு மகிழ்ச்சி தரும்.
அடுத்தடுத்த நட்சத்திர பலன்கள் அடுத்த பகுதியில்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஹமாரே பாரா’ படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை – முஸ்லீம் தலைவர்கள் வரவேற்பு!
தமிழிசை வீடு தேடிச் சென்ற அண்ணாமலை