யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மகம்:
பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் என்ற நினைப்பும், ஏனோதானோ செயல்பாடும் கூடாது. அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாற்றங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது.
குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். உறவுகள் யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. வீண் கண்டிப்பு தவிருங்கள். செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள்.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது. கூடாநட்பை உடனே விலக்குங்கள். படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். ஜீரண உறுப்பு, நரம்பு உபாதை, அல்சர் பிரச்னை வரலாம். முருகனை வழிபட்டால், முன்னேற்றம் உண்டாகும்.
பூரம்:
முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவுதான் நல்லது.
புதிய பொறுப்புகள் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது சிறப்பு. எதிர்பார்த்த மாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடி வரும். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். அது நிலைத்திருக்க, விட்டுக் கொடுத்தல் முக்கியம்.
சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் தவிருங்கள். தரல், பெறலில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழிலில் புதிய மாற்றமும் அதனால் ஏற்றமும் உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தை நேரடி கவனத்துடன் நேர்மையாகச் செய்யுங்கள்.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் கையெழுத்திடும் சமயத்திலும், பேச்சிலும் நிதானமாக இருங்கள். படைப்பாளிகளுக்கு திடீர் யோக வாய்ப்பு உண்டு. மாணவர்கள் எதிர்பாலரிடம் கவனமாகப் பழகுங்கள். வாகனப் பாதையில கவனச் சிதறல் கூடாது.
ரத்த சம்பந்தமான உபாதைகள், பெண்களுக்கு ஹார்மோன் உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுவது வாழ்வை பசுமையாக்கும்.
உத்தரம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதைத் தலைகனமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். திட்டமிட்டு செயல்பட்டால், நன்மைகள் தொடரும் பதவியுடனான இடமாற்றம் வந்தால் மறுக்க வேண்டாம். பொறுப்புகளை நேரடி கவனத்துடன் செய்வது அவசியம்.
குடும்பத்தில் உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும். இளம் வயதினர் சுபகாரியத்தில் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு சீராக இருக்கும். சட்டப்புறம்பின் நிழலையும் தவிருங்கள். படைப்புத் துறையினர் திட்டமிடலில் சறுக்கல் கூடாது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள். வாகனத்தில் சிறு பழுதும் உடன் சீர் செய்யுங்கள். வேகத்தைத் தவிருங்கள்.
முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகள் வரலாம். விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.
ஹஸ்தம்:
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம். அது ஆதாயமாகவே இருக்கும். சோம்பலை உடனடியாக விரட்டுங்கள். புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தினால் ஆதாயம் உண்டு.
அரசுத்துறையினர் வீண் களியாட்டம் தவிருங்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் பேசும்போது நிதானம் தேவை. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். கலைஞர்கள், படைப்புத்துறையினர், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். மாணவர்கள் அதிகாலைப் படிப்பைப் பழக்கமாக்குங்கள். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
சித்திரை:
சினம் தவிர்த்தால், சீரான நன்மைகள் கிட்டக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் சிடுசிடுப்பும் கடுகடுப்பும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அனுபவம் மிக்க யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். பொறுப்புகளில் கவனம் மிகமிக முக்கியம்.
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் முக்கியம். வரவு சீராக இருக்கும். சொத்து வழக்கில் விட்டுக் கொடுத்தலே நல்லது. செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். நேரான போக்கும், நேர்மையும் மிகமிக முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்கள், சீரான வளர்ச்சி காணலாம். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம்.
அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்திடம் பாராட்டு, பெருமை பெறுவீர்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் அலட்சியம் கூடாது. மாணவர்களுக்கு சோம்பல் கூடாது. இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம்.
ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், மறைமுக உறுப்பு பிரச்னை வரலாம். சிவன், பார்வதி வழிபாடு, வாழ்வை சீராக்கும்.
சுவாதி:
நிதானமாகச் செயல்பட்டால் நிம்மதி நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரலாம், தவிர்க்க வேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக் கொடுத்துப்போனால், பிரிவும் ,குழப்பமும் வராமல் இருக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். செலவை முறைப்படுத்துங்கள். வேண்டாத சகவாசம் வீணான பிரச்னைக்கு வழிகாட்டும் உடனே உதறுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.
அரசுத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புகள் எதிலும் நேரடி கவனம் செலுத்துங்கள். கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் வீண் வாக்குறுதிகள் தரவேண்டாம். படைப்பாளிகள், முயற்சிகளில் முடங்குவது கூடாது. மாணவர்கள் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.
பயணத்தில் சாலை விதிகளை மதிப்பது அவசியம். அலர்ஜி,காது,மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.
விசாகம்:
நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம் சோம்பல் தவிர்ப்பது முக்கியம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இடமாற்றம், பதவி எண்ணம்போல் வரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம்.
வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள். அரசுத்துறையினருக்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். படைப்புத் துறையினர் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். எதிர்பார்க்கும் நற்செய்திகள் நிச்சயம் வரும். மாணவர்களுக்கு சகவாசத்தால் பிரச்னை வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம்.
நரம்பு, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகளை உடனே கவனியுங்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.
அனுஷம்:
பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டால், இடமாற்றம், உயர்வுகள் கைகூடிவரும். யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம்.
குடும்பத்தில் நிம்மதி நிலவ, வீண் குழப்பம் தவிருங்கள். மூன்றாம் நபர் தலையீட்டைக் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் ஆலோசனை கேளுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம்.
அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிசார்ந்த விவரங்களை பிறரிடம் பகிர வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம்.
அடிவயிறு, தொண்டை, கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு ஏற்றம் தரும்.
கேட்டை:
அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரம் அலட்சியம் கூடவே கூடாது. திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.
குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். அது தொடர, விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். வழக்குகளில் சாதகமாகத் தீர்வு வரும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையாட்ட வேண்டாம். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம்.
அரசுத்துறையினர் கவனச் சிதறலைத் தவிருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். படைப்புத் துறைனருக்கு, பாராட்டுகள் கிடைக்கும். அதேசமயம்,புறம்பேசுவோர் நட்பு கனவிலும் வேண்டாம். மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளைப் பெறுவீர்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள்.
ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும்.
அடுத்தடுத்த நட்சத்திர பலன்கள் அடுத்த பகுதியில்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஹமாரே பாரா’ படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை – முஸ்லீம் தலைவர்கள் வரவேற்பு!