உதயசூரியனைத் தேடி ஸ்டாலின்: ஈசிஆர் சைக்கிளிங் பின்னணி!

Published On:

| By Balaji

அரசியல்வாதிக்கே உரிய வெள்ளை வேட்டி சட்டையைத் தவிர பிற உடைகளில் திமுக தலைவர் ஸ்டாலினை பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருப்போம். நமக்கு நாமே பயணத்தின் போது வித விதமான பேன்ட்-சட்டைகளில், டிஷர்ட்டுகளில் நியூ லுக் ஏற்படுத்திய ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிள் பயணமும் மேற்கொண்டு தனது ஃபிட்னஸ்சை வெளிப்படுத்தி வந்தார்.

அப்படிப்பட்ட ஸ்டாலின் முதல்வரான பின் முதல்முறையாக இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்று பொதுமக்களை ஈர்த்தார், இன்று அதிகாலை பேன்ட் சட்டையில் ஹெல்மெட்டும் அணிந்து சென்றபோதும் ஸ்டாலினை கண்டுபிடித்துவிட்டனர் பொதுமக்கள். ‘அங்க பாரு நம்ம முதலமைச்சரு சைக்கிள்ல வர்றாரு’ என்ற வியப்புக்குறியோடு மக்கள் அவரை நெருங்கி வந்து புன்னகைத்தனர், பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசினார். முதல்வரின் இந்த எளிமையான கலந்துரையாடல் அவரோடு பேசியவர்களுக்கு காலை நேரத்திலேயே புத்துணர்ச்சியை தந்தது.

தேர்தலுக்கு முன் அவ்வப்போது சைக்கிளில் சென்று பயிற்சி செய்வதை ஸ்டாலின் வழக்கமாகவே வைத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைத்து முதல்வராகிவிட்டதால் பல்வேறு பணிச் சுமைகளால் அவரால் வாக்கிங்கை கூட தவறாமல் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று (ஜூலை 3) காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கே வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டார். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ‘விட்டமின் டி உங்களுக்கு ரொம்ப தேவை. காலை நேர சூரிய ஒளியில இருந்துதான் அது அதிகமாக கிடைக்கும். அதனால வாக்கிங் அல்லது சைக்கிளிங் தவறாம போங்க’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தவர் அப்போதே, ‘நாளை காலை ஈசிஆரில் சைக்கிளிங் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதை தனது பாதுகாப்பு அதிகாரிகளிடமும் சொல்லிவிட்டார். நேற்று பிற்பகல் அறிவாலயத்துக்கு வந்து அமமுக பழனியப்பனை கட்சியில் இணைத்துக் கொண்டார். அதன் பின் கொஞ்ச நேரம் அறிவாலயத்தில் இருந்தவர் வீடு திரும்பினார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படியும் நேற்றே திட்டமிட்டபடியும் இன்று (ஜூலை 4) அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து காரில் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். ஸடாலினோடு பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். முதல்வர் இதுபோன்று நீண்ட தூரம் பயணம் செய்யும்போது பாரா டூட்டி என்று சொல்லி, சாலை முழுதும் போலீஸாரை நிறுத்தி வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் தான் செல்லும்போது அவ்வளவு எண்ணிக்கையிலான போலீஸாரை பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டாம் என்று முன்கூட்டியே உத்தரவிட்டுவிட்டார் ஸ்டாலின். மேலும் முக்கிய பாயின்ட்டுகளில் மட்டுமே போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். சித்தஞ்சன் சாலையில் இருந்து அதிகாலை வேகமாக சென்றதால் சில நிமிடங்களில் முட்டுக் காடு சென்றார்.

அங்கிருந்து சைக்கிளிங் செய்ய ஆரம்பித்த ஸ்டாலின் 18 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மாமல்லபுரத்தை நெருங்கினார். ஸ்டாலினுடன் சைக்கிளில் அவரது பாதுகாப்பு போலீஸார் மட்டுமே பயணித்தனர். அவர்களும் ஸ்டாலினைப் போன்றே உடையணிந்து அதே வேகத்தில் பயணிக்கும் சைக்கிளில் பயணித்தனர்.

முட்டுக்காட்டில் இருந்து பயணிக்கும் வழியில்தான் பொதுமக்களை சந்தித்து அவர்களோடு பேசினார் ஸ்டாலின். பலர் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவ்வழியே சென்ற ஒரு மூதாட்டியின் அருகே சென்று ஸ்டாலினே, பேச்சுக்கொடுக்க தன்னோடு பேசுவது முதல்வர் ஸ்டாலின் என்று அறிந்ததும் அவர் நெகிழ்ந்து உருகிவிட்டார்.

18 கிலோ மீட்டர் பயணித்து மாமல்லபுரத்துக்கு சற்று முன்னர்வரை சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கே தயாராக இருந்த தனது காரில் ஏறி சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்குத் திரும்பினார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி உதயசூரியனில் இருந்து கிடைக்கும் விட்டமின் டி க்காக சைக்கிளிங் சென்ற ஸ்டாலினுக்கு விட்டமின் டி மட்டுமல்ல, பொதுமக்களை சந்தித்துப் பேசியதால் புத்துணர்ச்சி விட்டமினும் கிடைத்துள்ளது. இனி அவ்வப்போது சைக்கிளிங் வருவார் ஸ்டாலின் என்பதே கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்றைய வாக்கிங் டாப்பிக்.

**-வணங்காமுடிவேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share