கோடிகளில் சொத்து… வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய்… வரி பாக்கி… : வேட்பாளர்களின் சொத்துமதிப்பு விவரங்கள்!

Published On:

| By Kavi

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துவிவரங்கள் வேட்பு மனுவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்கள், முதல்முறை வேட்பாளர்கள் ஆகியோரின் சொத்துவிவரங்களை இங்கு பார்க்கலாம்….

தமிழச்சி தங்கப்பாண்டியன் – திமுக – தென் சென்னை

Image

அமைச்சருக்கு கடன்

“திமுக வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் தனது கையிருப்பில் 2,06,211 ரூபாயும், கணவர் சந்திரசேகர் கையிருப்பில் 3,46,650 ரூபாயும், மகள் நித்திலாவிடம் ரூ.1,91,462 ரூபாயும் உள்ளது.

தன்னிடம் 69 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,270 கிராம் தங்கம் , 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1.5கிலோ வெள்ளி, கணவரிடம் 6லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் 120 கிராம், மகள் நித்திலாவிடம் 68,58,500 ரூபாய் மதிப்பிலான 1247 கிராம் தங்கம், 6,82,500 ரூபாய் மதிப்பிலான 9.75 கிலோ வெள்ளி இருக்கிறது.

2011ஆம் ஆண்டில் வாங்கிய 28,270 ரூபாய் மதிப்பிலான டிவிஎஸ் எக்ஸ்எல் உட்பட தனது பெயரில் மொத்தம் ஒரு கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 96 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், கணவர் பெயரில் 57 லட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

இதுதவிர தனது பெயரில் 47 ஏக்கர் நிலம் உட்பட 8,97,80,693 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் , கணவர் பெயரில் 2,67,03,250 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

வங்கி, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தனது பெயரில் 1,16,99,881 ரூபாய் கடன், தனது கணவர் பெயரில் 55,00,000 ரூபாய் கடன் இருக்கிறது.

தனது சகோதரரும் தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசுக்கு 10 லட்சம் ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளது” என தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் – தென் சென்னை – பாஜக

Image
சொந்த கார் கூட இல்லை

தனது கையில் ரூ.50,000, தனது கணவர் சவுந்தரராஜன் கையில் ரூ.50,000, மகள் பூவினி கையில் ரூ,50,000 உள்ளது.

தனது பெயரில் கார் உட்பட சொந்தமாக எந்த வாகனமும் இல்லை. கணவர் பெயரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் டொயாட்டா ஃபார்ட்ச்சுனர், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஃபோர்ஸ் எஸ்.யு.வி, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் ஃபோர்ஸ் டெம்போ டிராவலர், 3 லட்சம் ரூபாயில் ஹூண்டா கிரெட்டா கார் ஆகியவை உள்ளன.

96 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 சவரன் தங்கம் என தனது பெயரில் ஒரு கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286  ரூபாய் அசையும் சொத்துகளும், தனது கணவர் பெயரில் 3,92,01,426 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், மகள் பெயரில் 1,04,61,819 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

தனது பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், கணவர் பெயரில் 13.70 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

தனது பெயரில் 58.54 லட்சமும், கணவர் பெயரில் 3.35 கோடி ரூபாயும் மகள் பெயரில் 3.41 கோடி ரூபாயும் கடன் உள்ளது” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஜெயவர்தன் – தென் சென்னை – அதிமுக

Image
மனைவி வங்கிக் கணக்கில் வெறும் 8 ரூபாய்

ஜெயவர்தன்,  “தனது கையில் ஒன்றரை லட்சம் ரூபாய், மனைவி கையில் 50 ஆயிரம் ரூபாய் உள்ளது. மனைவியின் வங்கிக் கணக்கில் வெறும் 8 ரூபாய் தான் உள்ளது.
தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் கார் உட்பட எந்த வாகனமும் இல்லை.

6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கம், தனது பெயரிலும், 54.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 912 கிராம் தங்கம், தனது குடும்பத்தினர் ஒருவரது பெயரில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50கிராம் தங்கம் உள்ளது.

அதன்படி  தனது பெயரில் 21,55,261 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள்,  தனது மனைவி பெயரில் 55, 22,008 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளது.

நிலம், அப்பார்ட்மெண்ட் உட்பட ரூ.9,03,83,500 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

கடன் 3,99,38,000  ரூபாய் உள்ளது” என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

சவுமியா அன்புமணி – பாமக – தருமபுரி

Image
பென்ஸ் கார் – வைர நகைகள்

தருமபுரி தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி.

இவர்,   “தனது கையில் 90,000 ரூபாயும், கணவர் அன்புமணி ராமதாஸ் கையில் 25,000 ரூபாயும் உள்ளது.

தனது பெயரில் 9.47 லட்சம் ரூபாயில் ஹோண்டா ஜாஸ் கார், 53.59லட்சம் ரூபாயில் பென்ஸ் கார், 21.89 லட்சம் ரூபாயில் இன்னோவா கார் உள்ளது. கணவர் பெயரில் எந்த வாகனமும் இல்லை.

20 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி பொருட்கள், 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள், ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் உள்ளன.

அந்தவகையில் தனது பெயரில் 12,05,06,986  ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், கணவர் பெயரில் 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், குடும்பத்தினர் ஒருவரது பெயரில் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

விவசாய நிலம் உட்பட 48.18 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அன்புமணி ராமதாஸ் பெயரில் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

மொத்தம் 60.23 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. 9 கோடியே 15 லட்சம் ரூபாய் கடன் உள்ளது என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் சவுமியாவுக்கே அதிக சொத்துகள் உள்ளன.

பெரம்பலூர் – திமுக – அருண் நேரு

பெரம்பலூரில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்,

அவர் தனது கையிருப்பில் ரூ.2.14 லட்சம் ரொக்கம் உள்ளது. மனைவி தீபிகா பெயரில் ரூ.1.50 லட்சம் உள்ளது. வாகனங்கள் எதுவும் இல்லை. தன்னிடமும், தனது மனைவிடமும் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா 480 கிராம் தங்க நகைகள் உள்ளன.

அதன்படி தனது பெயரில் 46.20 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், மனைவி பெயரில் 83.47 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. பிள்ளைகள் ஆதிரை, கல்கி பெயரில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

10 ஏக்கர் விவசாய நிலம், திருச்சி சென்னையில் உள்ள வீடுகள் உட்பட ரூ.29.06 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. தனது பெயரில் 19 கோடியே 13 லட்சம் ரூபாய் கடன் உள்ளது” என வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

துரை வைகோ – மதிமுக – திருச்சி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர்,  “தனது கையிருப்பில் ரூ.2,05,000, மனைவி கீதாவிடம் ரூ.5,02,000, மகன் வருணிடம் ரூ.2,500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2,000 உள்ளது.

தனது பெயரில் ஹூண்டாய் இயன் எரா கார் உட்பட 46.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும்,

வைரம், தங்க, வெள்ளி நகைகள் என தனது மனைவி பெயரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், மகன் பெயரில் 8.63 லட்சம் அசையும் சொத்துகள், மகள் பெயரில் 13.85 லட்சம் அசையும் சொத்துகளும் என 2.19 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன.

வீடு, விவசாய நிலம் என தனது பெயர், தனது மனைவி பிள்ளைகள் உட்பட அனைவரது பெயரிலும் மொத்தம் 33.71 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக 35.9 கோடி சொத்துகள் உள்ளது.

கடனாக 1.35 கோடி ரூபாய் உள்ளது” என்று துரை வைகோவின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை – கோவை – பாஜக

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

அவர், “தனது கையில் ரூ.5.11 லட்சம் ரொக்கமும், மனைவி அகிலாவிடம் ரூ.1.56 லட்சம் ரொக்கமும் உள்ளது. வங்கிகளில் ரூ.25.30 லட்சம் உள்ளது.

5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஹோண்டா சிட்டி கார், மனைவியிடம் ரூ.20.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான 320 கிராம் தங்க நகைகள் உள்ளன.

அந்தவகையில் மொத்தமாக தனது பெயரில் ரூ.36.4 லட்சம் அசையும் சொத்துகளும், மனைவி அகிலா பெயரில் ரூ.2.3 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

தனது பெயரில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள 62.73 ஏக்கர் விவசாய நிலம், மனைவி பெயரில் கோவை செலக்கரிச்சல் கிராமத்தில் ரூ.53 லட்சம் மதிப்பிலான 0.8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

மனைவி பெயரில் ரூ.20,48,000 மதிப்பிலான 320 கிராம் தங்க நகைகள், மகள் ஆராதனா பெயரில் ரூ.3,10,450 மதிப்பில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட முதலீடு என 1.48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது. கடன் ஏதும் இல்லை” என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் – பாஜக -ராதிகா

Image
வருமான வரி, ஜிஎஸ்டி பாக்கி

நடிகை ராதிகா முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் தனது வேட்புமனுவில், “தனது கையில் ரூ.33.01 லட்சம், கணவர் சரத்குமார் கையில் ரூ.15.90 லட்சம் உள்ளது.

தனது பெயரில் 59.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி கார், சரத்குமார் பெயரில் 47.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபுள்யு கார்,

தன்னிடம் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் தங்க நகைகள், கணவர் பெயரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிராம் தங்க நகைகள் உள்ளன.

மொத்தமாக தனது பெயரில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், கணவர் பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

அசையா சொத்துகளை பொறுத்தவரை தனது பெயரில் 26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், கணவர் பெயரில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

கடன்களை பொறுத்தவரை ராதிகா அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, வருமான வரி நிலுவை 3.9 கோடி ரூபாய், ஜிஎஸ்டி 2.6 கோடி ரூபாய் நிலுவை என 6 கோடி ரூபாயும்,

சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை வருமான வரி நிலுவை 3.8 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை4.4 கோடி ரூபாய் என 8 கோடி ரூபாயும் உள்ளது.

மொத்தமாக ராதிகா சரத்குமாருக்கு 14 கோடி ரூபாய் கடன் உள்ளது” என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் – அமமுக – தேனி

 28 கோடி ரூபாய் கடன்

டிடிவி தினகரன் வேட்புமனுவில், “தனது கையிருப்பில் ரூ.54,825 உள்ளது. ரூ.19,82,973 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. ரூ.57,44,008 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. கார் உட்பட வாகனம் ஏதும் இல்லை. வங்கி உட்பட இதர நிறுவனங்களில் ரூ.9,25,029 கடன் உள்ளது.

அந்நிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை ரூ.28 கோடி உள்ளது.

மனைவியின் பெயரில் 1,69,25,118 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 2,48,79,707 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. 8,96,323 மதிப்பிலான ஸ்கார்பியோ கார் ஒன்று உள்ளது. மனைவி பெயரில் ரூ.22,87,960 கடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஆற்றல் அசோக்குமார்- அதிமுக-ஈரோடு

Gali būti 5 žmonės, televizija, žinių skyrius ir ligoninė vaizdas
500 கோடிக்கும் அதிகமாக சொத்து
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், “ தனது கையிருப்பில் 10 லட்சம் ரூபாயும், மனைவி கருணாம்பிகை கையிருப்பில் 5 லட்சம் ரூபாயும் உள்ளது.

வங்கிகளில் வைப்பு நிதி, தங்க வெள்ளி நகைகள் என ரூ.526,53,09,500 மதிப்பிலான அசையும் சொத்துகளும் , ரூ.56,95,00,000 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக ரூ.583,48,09,500 மதிப்பிலான சொத்து உள்ளது.

மனைவி கருணாம்பிகா பெயரில் ரூ.47,38,78,000 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.22,60,00,000 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக ஆற்றல் அசோக்குமாரின் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்புமனுக்களில் இடம்பெற்றுள்ள சொத்துகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதிக சொத்துகளை கொண்ட வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேட்பு மனு ஏற்பு… தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய கலாநிதி வீராசாமி

தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share