விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டமன்றம் கூடும் தேதி தள்ளிவைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
இதற்கிடையே நடப்பு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன் 24ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் மீது எந்தெந்த நாட்களில் விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து ஜூன் 12ஆம் தேதி தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் சட்டமன்றம் கூடும் தேதி தள்ளிபோக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு, “ வரும் ஜூன் 24ஆம் தேதி தலைமை செயலகத்தில் சட்டமன்றம் கூடும் என்று அறிவித்திருந்தேன். இது முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது என்பதை தொரிவித்துகொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும்தான் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும். அது வேறு எந்த மாவட்டத்தையும் கட்டுப்படுத்தாது. மானிய கோரிக்கை விவாதங்களில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது. அந்த மாவட்டத்துக்கான அறிவிப்பை மட்டும் நிறுத்திவைக்க தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். மற்றபடி அனைத்து பணிகளும் நடைபெறும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு
திமுகவில் இணைகிறாரா எஸ்.வி.சேகர்?