இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி சரிவை நோக்கிச் சென்றபோது ஜடேஜாவும், அஷ்வினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டெடுத்தனர் . அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்களை அடித்தார்.
இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்தது. இக்கட்டான சூழலில் அணியை மீட்டெடுத்த அஷ்வினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சொந்த மண்ணில் சதம் அடித்தது குறித்து அஷ்வின் கூறுகையில், “சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்போதுமே சிறப்பானதுதான். நான் கிரிக்கெட் விளையாட மிகவும் விரும்பும் மைதானம் சேப்பாக்கம். இந்த மைதானம் எனக்கு பல அற்புதமான நினைவுகளைக் கொடுத்துள்ளது. களத்தில் ஜடேஜா எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் எனக்கு அதிகளவில் வியர்வை வெளிப்பட்டு சோர்வடைந்தேன். இதை கவனித்த ஜடேஜா, 2 ரன்களை 3 ரன்களாக மாற்ற முயல வேண்டாமென்று அட்வைஸ் செய்தார்” என்று தெரிவித்தார்.
இந்த போட்டி சென்னையில் நடந்ததால் அஸ்வின் வசிக்கும் ராமகிருஷ்ணாபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்த நண்பர்கள், உறவினர்கள் போட்டியை காண வந்திருந்தனர். 43 வது ஓவரில் அஸ்வின் களமிறங்கிய போது, அவர்கள் உற்சாக கோஷமிட்டனர். அவர்கள் கொடுத்த உற்சாகம் அஸ்வினை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்திருக்கலாம்.
அஸ்வினின் பேட்டிங் திறமை மேம்பட கோச் கவுதம் கம்பிரும் ஒரு காரணம். முக்கியமாக ஆல்ரவுண்டர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்த அவர் நல்ல ஊக்கம் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற அஸ்வின் ,அங்கு பேஸ்பால் விளையாடி பயிற்சி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவும், அவரது பேட்டிங் திறனை உயர்த்த உதவியதாகவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆடிப்போன ஐ.எஸ்.எல்: பந்தை கைப்பற்றும் சாக்கில் எதிர் அணி வீரரின் தலையை உடைத்த வீரர்!
வேலுமணி மீது வழக்கு… அந்தர் பல்டி அடிக்கும் விஜிலென்ஸ்… எடப்பாடி காட்டம்!