பொன் ஒன்று கண்டேன்: விமர்சனம்!

Published On:

| By Selvam

Pon Ondru Kanden Review

கண்ட நாள் முதலாய்..!

‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி’ என்ற பாடலோடு தொடங்கிய ‘கண்ட நாள் முதல்’ படத்தை ‘ரொம்-காம்’ ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. பிரசன்னா, கார்த்திக் குமார் என்று அக்காலகட்டத்தில் பெரிதாக வளராத நடிகர்கள் இடையே முன்னணி நடிகையாக இருந்த லைலாவை நடிக்க வைத்து, துள்ளலான ஒரு காதல் படத்தைத் தந்திருந்தார் இயக்குனர் ப்ரியா.வி.

குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு ஆகியன கலந்திருந்தன. நடிகர் பிரகாஷ் ராஜின் தயாரிப்பு என்றொரு முத்திரையும் அதன் மீதிருந்தது.

அதன்பிறகு யுடிவி மற்றும் ராடான் தயாரிப்பில் ‘கண்ணாமூச்சி ஏனடா’ படத்தைத் தந்தார். அதில் பிருத்விராஜ் – சந்தியாவின் ஜோடிப்பொருத்தத்தை விட, சத்யராஜ் உடன் நாயகன் பிருத்வி அடிக்கும் லூட்டியே பிரதானமாக இருந்தது. இரண்டு படங்களிலும் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் முக்கியப் பங்காற்றியிருந்தார் யுவன் சங்கர் ராஜா.

அந்த படங்களுக்குப் பிறகு என்னவானார் ப்ரியா.வி என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ‘அனந்தம்’ வெப் சீரிஸுக்கு பிறகு ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தைத் தந்திருக்கிறார்.

‘கண்ட நாள் முதல்’ பாணியில் இதிலும் ஐஸ்வர்யா லட்சுமியை அசோக் செல்வன், வசந்த் ரவி இடையே ‘டூயட்’ பாட வைத்திருக்கிறார். இரு நாயகர்களும் நாயகியோடு காதல் கனவு காண்பது போன்று ‘பொன் ஒன்று கண்டேன்’ பாடலை ‘டைட்டில்’ ஆக்கியிருக்கிறார். சரி, இந்த படம் எப்படிப்பட்ட ‘ரொம் – காம்’ ஆக உள்ளது?

ஒரு நாயகி, இரு நாயகர்கள்!

கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் திரிபுர சுந்தரி எனும் சிறுமியைச் சந்திக்கின்றனர் சாய் மற்றும் சிவா. பார்த்த கணம் முதல் அவருடன் நட்பு கொள்வது யார் என்று இருவருக்குள்ளும் மோதல் பிறக்கிறது.

அந்த விஷயம் தலைமையாசிரியர் மீனா வரை செல்கிறது. இறுதியில், அந்த மாணவி பள்ளியை விட்டுச் செல்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வு தொட்டு பள்ளிக்காலம் முழுவதும் இருவருக்குள்ளும் பகை குறைந்தபாடில்லை.

சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் சாய், சிவா இருவரும் ‘ஸ்கூல் ரீயூனியனில்’ சந்திக்கின்றனர். அப்போது, சிவா (அசோக் செல்வன்) சென்னையில் ஒரு வெற்றிகரமான மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். வேலை, மனதுக்குப் பிடித்த பெண்களுடன் டேட்டிங் என்று ஜாலியான மனநிலை இருக்கிறார்.

சாய் (வசந்த் ரவி) கும்பகோணத்தில் தனது வீட்டில் தாய் மீனா (குமாரி சச்சு) உடன் வசிக்கிறார். டிமென்ஷியா எனும் நோயால் அவரது தாய் எந்த நினைவுகளுமின்றி இருக்கிறார். அவரைக் கவனிப்பதே சாயின் முழுநேர வேலை. உதவிக்கு அமுதா (தீபா சங்கர்) எனும் செவிலிப் பெண் இருக்கிறார். மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பவர் போன்று சாய் தோற்றம் உள்ளது.

ரீயூனியன் கூட்டத்தின் இடையே, தாய்க்கு உடல்நலம் சரியில்லை என்று சாய்க்கு அமுதா போன் செய்கிறார். அவருக்கு உதவும் பொருட்டு, அவரது வீட்டுக்குச் செல்கிறார் சிவா. முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பவர், ‘சென்னைக்கு வந்தால் அவருக்கு நல்ல சிகிச்சை தரலாம்’ என்கிறார்.

அதன்பிறகு, சாய் சென்னைக்கு இடம்பெயர்கிறார். அங்கு, அவருக்கு சிவாவே எல்லாமுமாக இருக்கிறார். அந்தச் சூழலில், தனது அபார்ட்மெண்டுக்கு புதிதாகக் குடிவந்த சாண்டி எனும் சுந்தரியைக் (ஐஸ்வர்யா லட்சுமி) கண்டதும் காதலில் விழுகிறார் சாய்.

சாய் – சாண்டி உறவு வளர, சிவா சில ஐடியாக்கள் தருகிறார். ஒருநாள் இருவரையும் நேரில் சந்திக்கிறார். அப்போது, அவருக்குள் அதிர்ச்சி பரவுகிறது. காரணம், சுந்தரி உடன் சிவாவுக்குத் திருமணம் நடந்து விவாகரத்து நிகழ்ந்திருக்கிறது. சாய்க்கு அந்த உண்மை தெரிந்தாலும், சிவா தான் சாண்டியின் கணவர் என்று அதுவரை தெரியாது.

இந்தச் சூழலில், தங்களுக்கு ஒருவரையொருவர் தெரியும் என்ற உண்மையை மறைத்து சாண்டியின் முன்னால் சிவாவும் சாயும் பொய் வேஷம் போடுகின்றனர்.

‘நண்பனின் முன்னாள் மனைவி சாண்டி’ என்பதே தன் முன்னிருக்கும் தடைக்கல் என்று நினைக்கிறார் சாய். ‘முன்னாள் மனைவியின் மீது இப்போது காதல் பிறப்பதாக’ உணர்கிறார் சிவா.

இருவருமே சாண்டியின் கவனத்தைக் கவர முயற்சிக்கின்றனர். அவரது முதுகுக்குப் பின்னால் ஒருவரோடு ஒருவர் மோதுகின்றனர். இறுதியில் என்னவானது? இந்த முக்கோணக் காதலுக்கு தீர்வு கிடைத்ததா என்பதோடு முடிவடைகிறது ‘பொன் ஒன்று கண்டேன்’.

ஒரு நாயகி, இரு நாயகர்கள் என்றிருந்தாலும், திரைக்கதையில் சிவாவும் சாயும் மோதிக்கொள்ளும் பின்பாதிக் காட்சிகள் மட்டுமே நமக்குச் சிரிப்பூட்டுகின்றன. அதேநேரத்தில், காதல் என்ற உணர்வு திரையில் எங்குமே நம் கண்ணில் தென்படவில்லை. அந்த அளவுக்கு ‘கெமிஸ்ட்ரி’ என்ற விஷயம் முதன்மை பாத்திரங்களுக்கு இடையே கொஞ்சம் கூட இல்லை என்பதே இந்த ‘ரொம் – காம்’ படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

’சவசவ’ திரைக்கதை!

அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய மூவர் ஏற்ற பாத்திரங்களைச் சுற்றியே மொத்த திரைக்கதையும் நகர்கிறது. காட்சிகளுக்குத் தகுந்தவாறு மூவருமே நடித்திருக்கின்றனர். ஆனாலும், அதில் கொஞ்சம் கூட ‘உயிர்ப்பு’ இல்லை.

அவர்கள் மட்டுமல்லாமல் மேத்யூ வர்கீஸ், அவரது மனைவியாக வருபவர், அசோக் செல்வனின் சகோதரிகளாக நடித்தவர்கள், அவரது மருத்துவமனை சகாக்கள் என்று பலரும் அப்படித்தான் திரையில் வந்து போயிருக்கின்றனர்.

குமாரி சச்சுவும் தீபா சங்கரும் மட்டுமே அந்த உணர்வு நமக்குள் எழாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
ஏ.டி.பகத்தின் ஒளிப்பதிவு அழகியல் அம்சங்களைத் திரையில் கொட்டினாலும், ஒரு சினிமா பார்க்கும் எண்ணமே வரவில்லை.

சூர்யா ராஜீவன் கலை வடிவமைப்பு, சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு ஆகியன இயக்குனரின் எண்ணத்தைச் செயல்படுத்தியிருக்கின்றன. அவ்வளவுதான். யுவன் சங்கர் ராஜா இசையில் ‘சுந்தரி’ பாடல் மட்டுமே சட்டென்று ஈர்க்கிறது. பின்னணி இசை கூட நம்மை மொத்தமாகத் திரைக்குள் புக வைக்கும் அளவுக்கு இல்லை.

ரீமா ரவிச்சந்தர் உடன் இணைந்து இயக்குனர் ப்ரியா.வி இதன் திரைக்கதையை அமைத்துள்ளார். கதை, வசனத்தை அவரே கையாண்டிருக்கிறார்.

விவாகரத்தான கணவன் மனைவி இருவரும் மீண்டும் சந்திக்கும்போது, அவர்களுக்கு இடையே ஒரு ஆண் வரும் கதை புதிதல்ல; ஆனால், அந்த ஆண் இருவருக்குமே தனித்தனியாக அறிமுகம் ஆனவர் என்பதே இக்கதையின் சிறப்பு.

அதனை வைத்துக்கொண்டு நம்மில் பல ஆச்சர்யங்களை விதைப்பார் என்று நினைத்தால், ’சவசவ’ என்று நகரும் திரைக்கதையால் இயக்குனர் ப்ரியா. வி ஏமாற்றியிருக்கிறார்.

திரைக்கதையின் தொடக்கத்திலேயே, சிறு வயது சாய், சிவாவைக் காட்டிவிடுகிறார் இயக்குனர் ப்ரியா.வி. ஆனால், திரிபுர சுந்தரியை முன்வைத்து அவர்கள் இருவரும் மோதிக்கொள்வதாகச் சொல்வது நமக்கு உவப்பில்லாததாக இருக்கிறது.

‘கண்டநாள் முதல்’ படத்திலும் கூட இப்படியொரு தொடக்கம் உண்டு. ஒருவேளை அது போன்ற மாயாஜாலத்தை பிரதியெடுக்கும் நோக்கில் இப்படியொரு சூட்டை இயக்குனர் போட்டுக் கொண்டாரா என்று தெரியவில்லை.

எங்கு நிகழ்ந்தது சறுக்கல்?

இரண்டு ஆண்களில் எவரைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு பெண் குழப்பமடைவது நிச்சயம் திரையில் ‘ப்ரெஷ்’ ஆகத் தெரியும் ஒரு விஷயம். ஆனால், அதனை விரிவாகக் காட்டினால் சிக்கல் ஆகும் என்று இயக்குனர் நினைத்து தவிர்த்திருக்கிறார்.

ஒரு படத்தின் யுஎஸ்பி இதுதான் என்று சொல்லிவிட்டு, அதனை முழுமையாகத் திரையில் காட்டாவிட்டால் எப்படி?
ஒரு காட்சியில் ’சாய்க்கு ஏன் ஹெல்ப் பண்ற’ என்று ஆத்திரமடையும் சிவாவின் சகோதரிகள், அடுத்த காட்சியில் வீட்டுக்கு அவர் வரும்போது விழிகள் விரியப் பார்ப்பார்கள். அவர்கள் ‘சைட்’ அடிப்பதை பார்த்துவிட்டு, ‘ச்சீ.. போங்க’ என்று விரட்டுவார் சிவா. இது போன்ற காட்சிகளே ‘க்ளிஷே’வாக தென்படுவதில்லை. அது போன்ற காட்சிகளை அமைத்திருந்தாலே, இப்படம் வேறு திசையில் பயணித்திருக்கும்.

தன்னை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காக சிவாவும் சாயும் தங்களுக்குள் இருக்கும் அறிமுகத்தை மறைத்தனர் என்பதை சாண்டி உணரும் தருணம் இப்படத்தில் மிக முக்கியமானது. கிளைமேக்ஸ் காட்சியில் அவர் நடிப்பில் அது சரியாக வெளிப்படவில்லை. இந்த படத்தை ‘ஸ்பூஃப்’ செய்வதற்குத் தகுதியான காட்சி அது.

ரசிகர்களை ஈர்க்கும் ஒற்றைவரிக் கதையைப் பிடித்த இயக்குனர், அதற்கு ஏற்ற திரைக்கதையை அமைக்காமல் சறுக்கியிருக்கிறார். அதனால், ‘கண்ட நாள் முதலாய் காதல் வெறுக்குதடி’ என்றுதான் இப்படத்தைப் பார்த்து பாட வேண்டியதாய் இருக்கிறது.

‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல், தமிழ் புத்தாண்டு அன்று ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. தற்போது ‘ஜியோ சினிமா’ தளத்தில் காணக் கிடைக்கிறது.

படத்தைப் பார்த்து முடித்தபிறகு, திரையரங்குகளில் அல்லாமல் நேரடியாக ஓடிடி தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளியாகும் படங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை என்ற எண்ணம் வலுப்படுகிறது. அது மட்டுமே ‘பொன் ஒன்று கண்டேன்’ நமக்குத் தந்தவற்றில் மிக முக்கியமானது!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை

மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

பதிலடி தாக்குதல்: ஈரான் அணுமின் நிலையங்களை டார்கெட் செய்த இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share