நான் உயிரோடு இருக்கும் வரை மேற்கு வங்காள மாநிலத்துக்குள் குடியரிமைத் திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 27) நைஹாட்டி என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,
“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு என் முழு ஆதரவு உண்டு. 18 வயதை எட்டிய மாணவர்களுக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க உரிமை உள்ளது. ஆனால் அரசாங்கத்தை எதிர்க்க உரிமை இல்லையா? கடுமையான சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது? எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றுகிறது” என்ற மம்தா பானர்ஜி,
“நான் உயிருடன் இருக்கும் வரை சிஏஏ சட்டமோ, தடுப்புக் காவல் மையங்களோ மேற்கு வங்காளத்தில் செயல்படுத்தப்படாது. யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை” என்றார்.
முன்னதாக நேற்று ராஜபஜார் பகுதியில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் இப்போது தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) என்று கொண்டு வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது மத்திய அரசு. பாஜக நெருப்போடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது என்பிஆர் பொறுத்தவரை, மக்கள் தங்கள் பெற்றோரின் பிறந்த தேதி, குறிப்பாக அவர்களின் தந்தையின் பிறந்த தேதி குறித்து ஆவணம் அளிக்க வேண்டும். எனது தந்தையின் பிறந்த தேதி எனக்குத் தெரியாது. என் தந்தை எப்போது இறந்தார் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அந்த காலங்களில் மக்கள் பிறந்த தேதி குறித்த பதிவுகளை அரிதாகவே வைத்திருந்தார்கள். என்னாலேயே அதைச் சொல்ல முடியாதபோது, கிராமப்புற மக்கள் எப்படி தெரிந்து வைத்திருப்பார்கள்? ஆனால் மக்கள் பயப்பட வேண்டாம். என் பிஆர் பணிகளை மேற்கு வங்க அரசு ஏற்கனவே மாநிலத்தில் நிறுத்தி வைத்துள்ளது” என்று கூறினார் மம்தா பானர்ஜி.
