“நான் ஊழல் செய்ததால் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறைக்கு செல்கிறேன்” என்று திஹார் சிறையில் சரணடைவதற்கு முன்பாக கெஜ்ரிவால் தனது தொண்டர்கள் மத்தியில் இன்று (ஜூன் 2) உரையாற்றினார்.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2-ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்தநிலையில், உடல்நலம் கருதி ஜாமீனை ஒருவார காலம் நீட்டிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், உச்சநீதிமன்ற பதிவாளர் கெஜ்ரிவால் வழக்கை அவசர வழக்காக பட்டியலிட மறுத்தார்.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பிணை நீட்டிப்பு வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று (ஜூன் 2) விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, வழக்கின் தீர்ப்பை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கெஜ்ரிவால் இன்று திஹார் சிறையில் சரணடைய டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து மதியம் 3 மணியளவில் கிளம்பினார்.
முதலில் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கன்னட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், “நான் ஊழல் செய்ததால் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறைக்கு செல்கிறேன்.
உச்சநீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் பிணை வழங்கியது. இந்த 21 நாட்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. இந்த நேரத்தில் ஒரு நிமிடம் கூட நான் வீணடிக்கவில்லை.
இந்தியாவை பாதுகாப்பதற்காக நான் பிரச்சாரம் செய்தேன். ஆம் ஆத்மி கட்சியை விட இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானது.
ஜூன் 4-ஆம் தேதி நிச்சயமாக பாஜக ஆட்சியமைக்க மாட்டார்கள். நேற்று வெளியாகியிருக்ககூடிய எக்சிட் போல் முடிவுகள் என்பது உங்களை உளவியல் நெருக்கடியில் ஆழ்த்தும் மைண்ட் கேம்” என்றார்.
பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து தனது மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா ஆகியோருடன் திஹார் சிறை நோக்கி கெஜ்ரிவால் தனது காரில் கிளம்பினார். பின்னர் திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க… எக்சிட் போல் குறித்து பிராஷாந்த் கிஷோர்
எக்சிட் போல்… இந்தியா கூட்டணிக்கு மோடியின் கடைசி உளவியல் நெருக்கடி!
