கெஜ்ரிவால் கைது: இந்தியா – ஜெர்மனி இடையே முற்றும் மோதல்!

Published On:

| By Selvam

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று அம்மாநில அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை, தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை திடீரென கைது செய்தது.

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு முறைகேடாக ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக கவிதா மீது குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, அவரை மார்ச் 15 அன்று கைது செய்தது. இதை தொடர்ந்து, அவருக்கு மார்ச் 23 வரை அமலாக்கத்துறை காவல் வழங்கிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அந்த காவலை தற்போது மார்ச் 26 வரை நீட்டித்துள்ளது.

இதற்கிடையில், கவிதா மீதான கைது நடவடிக்கைக்கு ஒரு வாரத்திற்குள்ளேயே, 9 முறை சம்மன் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை என மார்ச் 21 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, அவரை திடீரென அமலாக்கத்துறை கைதும் செய்தது.

ADVERTISEMENT

மாநிலத்தின் முதல்வராக உள்ள ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கைது நடவடிக்கை, நாட்டில் எதிர்க்கட்சிகள் இடையே மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த நிகழ்வுகள் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கிற்கும் பொருந்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்தலாம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை, ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் அவருக்கும் பொருந்தும்”, என கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜெர்மனி வெளியுறவுத்துறையின் இந்த கருத்து, இரு நாடுகள் இடையே ஒரு உராய்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இம்மாதிரியான கருத்துக்கள், இந்திய நீதித்துறையின் செயல்பாட்டில் நேரடியாக தலையிடும் வண்ணம் உள்ளதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை தரம் தாழ்த்தும் வண்ணம் இருப்பதாகவும் கருதுவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவிதித்துள்ளது.

இந்த கருத்து தேவையற்றது, ஒருதலைப்பட்சமானது மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் நேரடியாக தலையிடும் வண்ணம் உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்தியா சட்டத்தின்படி ஆட்சி நடத்தும் ஒரு வலுவான ஜனநாயகம். ஜனநாயக உலகில் பிற இடங்களிலும் உள்ளதைப் போலவே, இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட வழக்குகளிலும், சட்டம் அதன் சொந்த போக்கில் முடிவுகளை எடுக்கும். இந்த விவகாரத்தில், இது போன்ற அனுமானங்கள் மிகவும் தேவையற்றவை”, எனவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் ஜெர்மன் தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் அவரே மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

KKR vs SRH: கெய்லின் சாதனையை அடித்து நொறுக்கிய ஆன்ட்ரே ரசல்

திமுக பிரச்சாரத்திற்கு செல்கிறேனா? : சூரி பதில்!

Photo of author
Selvam

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share