தைத்திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சி, மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
அதனைத்தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 17) காலை 7 மணிக்கு துவங்கியது. இதனை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உதயநிதியுடன் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோர் போட்டியைக் காண அலங்காநல்லூர் வருகை தந்துள்ளனர்.
இருவரையும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அலங்காநல்லூர் விழா குழுவினர் வரவேற்ற நிலையில் அவர்கள் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள மிஷன் சாப்டர்-1 திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 110 காளைகள் களமிறங்கியுள்ளன. அதில் மாடுகள் பிடிபட்டன.
2 சுற்றுகள் முடிவில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் அதிகபட்சமாக 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 4 காளைகளை அடக்கி கட்டிக்குளத்தைச் சேர்ந்த சிவசேகரன் 2ஆம் இடமும், இடத்தில் 2 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் மற்றும் இருங்கங்கோட்ட நல்லப்பா ஆகியோர் உள்ளனர்.
இதற்கிடையே காளை முட்டியதில் இதுவரை மாடுபிடி வீரர், பார்வையாளர், உரிமையாளர் மற்றும் காவலர் என 10 பேர் காயமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
