’இளஞ்ஜோடிகள்’ படத்தில் அறிமுகமாகி ‘சிதம்பர ரகசியம்’, ‘ஊமை விழிகள்’ மூலமாகத் தமிழ் ரசிகர்களை வசீகரித்த அருண் பாண்டியன் ‘இணைந்த கைகள்’,’ராஜ முத்திரை’, ‘முற்றுகை’ என்று சில ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். arun pandian team up akkenam
தொண்ணூறுகளில் தெலுங்கு, கன்னட மொழிகளில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. தேவன், விகடன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் அருண் பாண்டியன், ஐங்கரன் இண்டர்நேஷனல் மூலமாக ஏகன், அங்காடித்தெரு, பேராண்மை, வில்லு உட்படச் சில படங்களைத் தயாரித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு வெளியான ‘அன்பிற்கினியாள்’ படத்தைத் தயாரித்ததோடு, அதில் குணசித்திர பாத்திரமொன்றை ஏற்று நடித்திருந்தார். அதில் நாயகியாக நடித்தவர், அவரது மகள் கீர்த்தி பாண்டியன்.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிற திரைப்படம் ‘அஃகேனம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதையை அமைத்ததோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் அருண் பாண்டியன். இதில் அவரது இன்னொரு மகள் கவிதா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
தமிழில் ஆய்த எழுத்து என்று குறிப்பிடப்படுவது ‘ஃ’. மூன்று புள்ளிகளாக அமைந்த இதன் வரிவடிவத்தைப் போன்று இப்படத்தின் திரைக்கதையும் இருக்குமென்று கருதலாம்.
அக்கன்னா என்று குறிப்பிடப்படும் இந்த எழுத்தினை ‘அஃகேனம்’ என்றும் சொல்வார்கள். அந்த வகையில், இப்படத்தின் டைட்டில் அமைந்துள்ளது.
மூன்று வெவ்வேறு மனிதர்கள், அவர்களுக்கான பிரச்சனைகள், அவை அவர்களை ஒன்றிணைப்பதாகத் திரைக்கதை இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ’அஃகேனம்’ உண்டு பண்ணியிருக்கிறது. ’A Trio’ எனும் டேக்லைனும், ‘karma never dies’ எனும் பஞ்ச் லைனும் அதனை உணர்த்துவதாக உள்ளன.
உதய் கே இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங், நம்ரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பரத் வீரராகவன், ஒளிப்பதிவாளராக விக்னேஷ் கோவிந்தராஜன், படத்தொகுப்பாளராக தேவாத்யன் ஆகியோர் இப்படத்தில் அறிமுகமாகவிருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு அசோக் செல்வனைக் கீர்த்தி திருமணம் செய்ததும், அவர் நடித்த ‘ப்ளூஸ்டார்’, ‘கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படங்கள் கடந்த ஆண்டு தாமதமாக வெளியானதும் நாம் அறிந்ததே. இந்த நிலையில், தற்போது தந்தை அருண் பாண்டியனுடன் அவர் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. arun pandian team up akkenam