வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.”ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை அக்டோபர் 18ஆம் தேதி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அக்டோபர் 17ஆம் தேதியே சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தனது தி.நகர் இல்லத்தில் இருந்து இந்த செய்தியை அறிந்து கொண்டு உற்சாகமாகவே ராமாபுரம் தோட்டத்திற்கு புறப்பட்டார் சசிகலா. அங்கே அதிமுகவின் 51ஆவது ஆண்டு நிறுவன விழாவில் கலந்து கொண்டு 102 நிமிடங்கள் பேசியிருக்கிறார் சசிகலா.
அந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினரை சந்தித்து நலம் விசாரித்து சிரித்தபடியே தன் வீட்டுக்கு திரும்பினார்.
மறுநாள் அக்டோபர் 18ஆம் தேதி காலை சட்டமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன் பிடிஎப் பைல் உடனடியாக சசிகலா தரப்பினருக்கு கிடைத்தது.
613 பக்கங்களையும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் படிக்க ஆரம்பிக்க, தனது வீட்டில் இருந்தபடியே உடனடியாக ஆணையத்தின் இறுதி பகுதியில் இடம்பெற்ற பரிந்துரையை முழுவதுமாக படித்துப் பார்த்தார் சசிகலா.
அப்போது வீட்டில் வழக்கறிஞர்கள் இல்லை. இளவரசியும் கிருஷ்ணபிரியாவும் தான் இருந்தனர். ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை இப்படித்தான் இருக்கும் என்பதை ஏற்கனவே தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார் சசிகலா.
ஆணையத்தின் விசாரணை முடியாதபோதே … ‘ இந்த ஆணையத்தின் ஹீரோ அப்பல்லோ ஹீரோயின் சசிகலா’ என்று ஆறுமுகசாமி தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு தகவல்கள் சென்றன.
‘ஆரம்பத்தில் இருந்தே அவர் நமக்கு எதிராக தானே செயல்பட்டு வர்றாரு. என்னோட பிரமாண பத்திர வாக்குமூலத்திலேயே நான் அதை சொல்லி இருக்கேனே?’ என்று அப்போதே குறிப்பிட்டார் சசிகலா.
கிட்டத்தட்ட அதே மனநிலையில் நேற்று இந்த முடிவை எதிர்பார்த்து தான் இருந்தார் சசிகலா. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையில் பயன்படுத்தி இருக்கின்ற சில சொற்றொடர்கள் சில வாக்கியங்கள் அவரை ரொம்பவே காயப்படுத்தி விட்டன.
சில வரிகளை தனது விரல்களால் அழுத்தி காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சசிகலா.
பகல் 12.30 மணிக்கு வெள்ளை தாளை எடுத்து இந்த அறிக்கையின் மீதான தனது ரியாக்ஷனை எழுதத் தொடங்கி விட்டார் சசிகலா. சில மணி நேரங்கள் வரை அறிக்கையை எழுதிய அவர், பிறகு தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கத் தொடங்கினார்.
”இந்த விசாரணை அறிக்கை அரசியல் பின்னணி கொண்டதுதான்மா. பப்ளிக்ல நம்மள பத்தி சில ஒபினியன் உருவாக்க இது காரணமாய் இருக்கும். ஆனா லீகலா பெரிய பிரச்சனை இருக்காதும்மா’ என்று சொல்லி இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

இதன்பிறகு அறிக்கையை தனது வழக்கறிஞரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி சட்டரீதியான திருத்தங்கள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார் சசிகலா.
இதற்கிடையே நேற்று இரவு டிடிவி தினகரன் தேடிச் சென்று சசிகலாவை சந்தித்தார். அவரும் இந்த அறிக்கையால் கேரக்டர் அசாஸினேஷன் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் மற்றபடி லீகலாக இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
அப்போது தினகரனிடம் சசிகலா, ‘இத பத்தி நாம உடனே விளக்கி ஆகணும் நானும் அறிக்கை ரெடி பண்ணிட்டேன். இப்ப வெளியிட்டுருவேன்’ என்று கூறியுள்ளார். அதற்குப் பிறகுதான் இரவு 10 மணி அளவில் தனது மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார்.
சசிகலாவை சந்தித்து வெளியில் வந்து டிடிவி தினகரன், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பற்றி விமர்சித்தார்.
உடனடியாக ஜெயா டிவிக்கும் இந்த விஷயத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரான மக்களின் குரல்களை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இப்போது ஆணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் தீவிரமாக படித்து அனலைஸ் செய்து வருகிறார்கள். ஒருவேளை தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை முளையிலேயே முறியடிக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்ய அவர்கள் தயாராகி வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.