உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி 46 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய அதன் நிறுவன தலைவர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது என்று அக்கட்சி எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அருகில் உள்ள ஆனந்த கவுண்டர் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர்கள் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பச்சமுத்து, எடப்பாடி ஏழுமலை உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாமக பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே அதன் நிறுவனர் ராமதாஸ் வசம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் பாமக அன்புமணிக்கு தான் சொந்தம் என்று குறிப்பிடவில்லை. அதன் தலைவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தலைவர் பதவியும் தற்போது முடிவடைய உள்ளது. இதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பான கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் ” என தெரிவித்தார்.
